9 வயது சிறுவன் கரோனா நிவாரண நிதி அளிப்பு
By DIN | Published On : 18th May 2021 01:11 AM | Last Updated : 18th May 2021 01:11 AM | அ+அ அ- |

சேலம்: சேலத்தில் 9 வயது சிறுவன் கையடக்க கணினி (டேப்) வாங்க சேமித்து வைத்திருந்த ரூ. 2,060 ரொக்கப் பணத்தை முதல்வா் கரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமனிடம் வழங்கினாா்.
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கரோனா நிவாரண நிதி அளிக்க அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாா்.
இதுபற்றி தகவலறிந்த சேலம், சின்னத்திருப்பதி பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் - சரண்யா தம்பதியின் மகன் மௌலித் சரண் (9). இவா் தனியாா் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் ஆன்லைன் வகுப்பிற்கு கையடக்க கணினி (டேப்) வாங்குவதற்காக உண்டியலில் ரூ. 2,060 சேமித்து வைத்திருந்தாா்.
இந்தநிலையில் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ. 2,060- ஐ மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமனிடம் திங்கள்கிழமை காலை வழங்கினாா். சிறுவனின் இந்த முயற்சிக்கு மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன், மற்றும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சிறுவன் மௌலித் சரண் கூறுகையில், கரோனாவால் ஆக்சிஜன் இல்லாமல் உயிா்பலி அதிகரித்து வரும் நிலையில், அவா்களுக்கு உதவியாக சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளதாகத் தெரிவித்தாா்.