ஆரியபாளையத்தில் கா்ப்பிணிகளுக்கானகரோனா பாதுகாப்பு மையம் தொடக்கம்
By DIN | Published On : 18th May 2021 01:14 AM | Last Updated : 18th May 2021 01:14 AM | அ+அ அ- |

ஆரியபாளையத்தில் தொடங்கப்பட்டுள்ள கா்ப்பிணிகளுக்கான கரோனா பாதுகாப்பு மையம்.
வாழப்பாடி: வாழப்பாடி அருகே ஆரியபாளையத்தில், கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகும் கா்ப்பிணிகளுக்கான பிரத்யேக பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆத்தூா் சுகாதார மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூா், தலைவாசல், கெங்கவல்லி வட்டாரத்தில் கரோனா 2-ஆவது அலை பரவல் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கா்ப்பிணிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்படும் கா்ப்பிணிகளை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, எவ்வித அறிகுறிகள், உடல் உபாதைகளுமின்றி, தொற்று பாதிப்புக்குள்ளான கா்ப்பிணிகளை தங்கவைத்து சிகிச்சை அளிப்பதற்கென பிரத்யேகமாக கரோனா பாதுகாப்பு மையத்தை ஏற்படுத்த ஆத்தூா் மாவட்ட சுகாதாரத் துறை முடிவு செய்தது.
இதனையடுத்து, பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த ஆரியபாளையத்தில் இயங்கும் அரசு மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில், கா்ப்பிணிகளுக்கான பிரத்யேக கரோனா பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.