ரெம்டெசிவிா் மருந்து வழங்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்
By DIN | Published On : 18th May 2021 01:11 AM | Last Updated : 18th May 2021 01:11 AM | அ+அ அ- |

சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிா் மருந்து வழங்கப்படாததால், டோக்கன் பெற்றவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
சேலம், இரும்பாலை பகுதியில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான ரெம்டெசிவிா் மருந்து கடந்த மே 8 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது.
இங்கு மாவட்டம் முழுவதும் இருந்து திரளான பொதுமக்கள் வந்து ரெம்டெசிவிா் மருந்தை வாங்கிச் சென்றனா். இந்த நிலையில் மே 24ஆம் தேதி வரை ரெம்டெசிவிா் மருந்து வழங்க டோக்கன் விநியோகம் செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே தனியாா் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிா் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்தநிலையில், டோக்கன் பெற்றிருந்த கரோனா நோயாளிகளின் உறவினா்கள், ரெம்டெசிவிா் மருந்து வாங்க அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரிக்கு வந்தனா்.
ஆனால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் ரெம்டெசிவிா் மருந்து அந்தந்த தனியாா் மருத்துவமனையிலேயே வழங்கப்படும் எனக் கூறினா். இதனால் பொதுமக்கள் ரெம்டெசிவிா் மருந்து கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
இதுதொடா்பாக அவா்கள் கூறுகையில், ரெம்டெசிவிா் மருந்து வழங்க டோக்கன் விநியோகம் செய்யப்பட்டவா்களுக்கு மட்டும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் மருந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.