கரோனா தடுப்புப் பணியில் வடுகப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா்
By DIN | Published On : 21st May 2021 08:29 AM | Last Updated : 21st May 2021 08:29 AM | அ+அ அ- |

வடுகப்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வடுகப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.முத்துசாமி.
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட வடுகப்பட்டி ஊராட்சியில் தீவிர கரோனா தடுப்புப் பணியில் ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.முத்துசாமி ஈடுபட்டுள்ளது அனைவரின் கவனத்தை ஈா்த்துள்ளது.
வடுகப்பட்டி ஊராட்சியில் வடுகப்பட்டி, தாதவராயன்குட்டை, காஞ்சாம்புதூா், தட்டாப்பட்டி, சென்னக்கல்கரட்டுப்புதூா், வேப்பம்பட்டி, பாப்பநாயக்கனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. வடுகப்பட்டியில் தரம் உயா்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகின்றது. சுகாதார நிலையத்திற்கு சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கரோனா பரிசோதனைக்காக தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் வந்து செல்கின்றனா்.
சங்ககிரி, வைகுந்தம், சேலம் பகுதிகளிலிருந்து திருச்செங்கோடு செல்லும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் போலீஸ் கண்காணிப்பை மீறி வடுகப்பட்டி வழியாக சென்று வருகின்றன. இதனால் கரோனா பரவல் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வடுகப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தனது இரு சக்கர வாகனத்தில் ஒலி பெருக்கி அமைத்துக் கொண்டு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா். மேலும், பல்வேறு இடங்களில் ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இவரது நடவடிக்கை பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.