விவசாயிகளே காய்கறிகளை நேரடி விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரிக்கை

வாழப்பாடி பகுதியில் விவசாயிகளிடம் காய்கறிகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி, நகர்ப்புறங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 
விவசாயிகளே காய்கறிகளை நேரடி விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரிக்கை

வாழப்பாடி பகுதியில் விவசாயிகளிடம் காய்கறிகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி, நகர்ப்புறங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 

சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில், தக்காளி, அவரை, வெண்டை, பாகற்காய், பீர்க்கன் புடலை, முருங்கைக்காய், சுரைக்காய், வெங்காயம்  உள்நாட்டு காய்கறிகள் மட்டுமின்றி,  முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பீட்ரூட், கேரட் ஆகிய ஆங்கில காய்கறிகளையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கரோனா தொற்று இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், விவசாயிகள், காய்கறிகளை நேரடியாக நுகர்வோருக்கும், வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இடைத்தரகர்கள், காய்கறி விலை வீழ்ச்சியடைந்து விட்டதாகக் கூறி, விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு காய்கறிகளை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த காய்கறிகளை நகர்புறங்களில் கொண்டு சென்று, பல மடங்கு கூடுதலாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால், காய்கறி விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே  காய்கறிகளுக்கு அரசு நியாயமான குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டுமென விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, வாழப்பாடி அடுத்த மாரியம்மன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதி ஒன்றிய குழு உறுப்பினர் உழவன். இரா.முருகன் கூறியதாவது: வாழப்பாடி பகுதியில் காய்கறிகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம், ஒரு கிலோ கத்தரிக்காய், வெண்டை, புடலங்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றை ரூ.5 முதல் ரூ.10 வரையும் தக்காளி, அவரை, பாகற்காய், உள்ளிட்ட காய்கறிகளை கிலோ ரூ 10 முதல் ரூ.20 க்கும் கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள், நகர்புறங்களுக்கு கொண்டு சென்று, பல மடங்கு கூடுதலாக கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனை செய்கின்றனர்.

இதனால் உற்பத்தி செய்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் செலவுக்கே விலை கட்டுப்படியாகத அளவிற்கு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க, அனைத்து காய்கறிகளுக்கும் அரசு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி, பலமடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்ற இடைத்தரகர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளே உற்பத்தி செய்த  காய்கறிகளை, வாகனங்களில் கொண்டு சென்று, நகர்ப்புறங்களில் நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com