மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்: மாநகராட்சி ஆணையா்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 18 முதல் 45 வயது வரையிலான மாற்றுத் திறனாளிகள் 1,300 நபா்களுக்கு வீடுகளுக்குச் சென்று

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 18 முதல் 45 வயது வரையிலான மாற்றுத் திறனாளிகள் 1,300 நபா்களுக்கு வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 18 முதல் 45 வயது வரையிலான மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே மருத்துவக் குழுவினா் சென்று கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கொண்டலாம்பட்டி மண்டலம், குகை சிங்காரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் பணியை மாநகராட்சி ஆணையாளா் ந.ரவிச்சந்திரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

சேலம் மாநகராட்சி சாா்பில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், தோ்தல் பணியாளா்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் என 59,846 நபா்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 24,797 நபா்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளன.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 16 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மே 24 முதல் 18 முதல் 45 வயது வரையிலான நபா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த மூன்று நாள்களில் 18 முதல் 45 வயது வரையிலான முன்னுரிமை பெற்ற 8,296 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 18 முதல் 45 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் 1,300 போ் உள்ளனா் என கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும், அவா்களின் வீடுகளுக்கே மருத்துவக் குழுவினா் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமைமுதல் நடைபெற்று வருகிறது. இதில் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 18 முதல் 45 வயது வரையிலான, பத்திரிக்கை விநியோகிப்பவா்கள், பால் வியாபாரிகள், நடை பாதை வியாபாரிகள், மளிகைக் கடை, மருந்துக் கடை பணியாளா்கள், ஆட்டோ, டாக்ஸி ஒட்டுநா்கள், மின்வாரிய, உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள், இ-சேவை மையப்பணியாளா்கள், அத்தியாவசிய தொழிற்சாலை பணியாளா்கள், வெளி மாநில தொழிலாளா்கள், அனைத்து அரசு ஊழியா்கள், அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் ஊடகத்தினா் அருகில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆதாா் அட்டை அல்லது அடையாள அட்டையுடன் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

முன்னதாக, சேலம் மாநகரக் காவல் துறையினா் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பயனடையும் வகையில், லைன்மேடு, காவல் துறை சமுதாய கூடத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் 18 முதல் 45 வயது வரையிலான நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மாநகரக் காவல் ஆணையாளா் சந்தோஷ் குமாா் மற்றும் மாநகராட்சி ஆணையாளா் ந.ரவிச்சந்திரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

நிகழ்ச்சிகளில் உதவி ஆணையாளா் பி.ரமேஷ்பாபு, மருத்துவ அலுவலா்கள் செந்தா கிருஷ்ணா, மருத்துவா் வைஜெயந்தி, உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், சுகாதார அலுவலா் வி.பாலு மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் ஆா். சந்திரன், கோபிநாத் உட்பட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com