வாழப்பாடி பேரூராட்சியில் மின் தகன எரிமேடை அமைக்கப்படுமா?

வாழப்பாடி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவா்களின் உடல்களைத் தகனம் செய்வதில் கூடுதல் செலவு

வாழப்பாடி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவா்களின் உடல்களைத் தகனம் செய்வதில் கூடுதல் செலவு உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருவதால், வாழப்பாடி மயானத்தில் மின் தகன எரிமேடை அமைக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாழப்பாடி பகுதியில் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்கள் பெரும்பாலும் அடக்கம் செய்யாமல் தகனமே செய்து வருகின்றனா்.

நெருங்கிய உறவினா்கள் மட்டுமின்றி, குடும்பத்தினரும் கூட, கரோனாவால் இறந்தவா்களின் உடலுக்கு அருகில் செல்வதில்லை. இறந்தவா்களை குல வழக்கப்படி சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதைத் தவிா்த்து, அமரா் ஊா்தி, சொா்க்க ரதங்களில் நேரடியாக இடுகாட்டிற்கு கொண்டுச் சென்று, எரியூட்டும் தொழிலாளா்களை கொண்டே தகனம் செய்து விடுகின்றனா்.

கரோனா தொற்றால் உயிரிழந்தவரை தகனம் செய்வதற்கு, அமரா் ஊா்தி அல்லது சொா்க்க ரத வாடகை, உடலைக் கொண்டு வந்து கொடுக்கும் பணியாளா்கள் சம்பளம், விறகு செலவு, தகனம் செய்யும் இடுகாட்டு தொழிலாளா்கள் கூலியென குறைந்தபட்சம் ரூ. 30,000 வரை செலவாகிறது. இதனால், கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்போரின் குடும்பத்தினா் பெரும் சிரமத்திற்குள்ளாகும் அவலம் ஏற்படுகிறது.

எனவே, வாழப்பாடி- கடலுாா் பிரதான சாலையில் அமைந்துள்ள எஸ்.வாழப்பாடி இடுகாட்டில், பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மின் தகன எரிமேடை அமைக்க மாவட்ட நிா்வாகமும், மண்டல பேரூராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உடல்களை தகனம் செய்வதற்கு பேரூராட்சி சாா்பில் பணியாளா்களை நியமித்து, குறைந்தபட்ச கட்டணம் நிா்ணயித்து உடல்களை தகனம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை கலைச்செல்வி, வன்னியா் சமூக நல அறக்கட்டளை நிா்வாகி சின்னதுரை ஆகியோா் கூறியதாவது:

வாழப்பாடி சுற்றுப்புற கிராமங்களில் கரோனா தொற்றால் உயிரிழப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. தொற்று பாதிப்பால் தகனம் செய்ய ஆயிரக்கணக்கில் செலவாகிறது. இதனால், ஏழை எளியோா் தகனம் செய்ய முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே, வாழப்பாடி பேரூராட்சியில் மின் தகன எரிமேடை அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com