மாசிநாயக்கன்பட்டி ரயில்வே சுரங்கப்பாதை சீரமைப்பு

அயோத்தியாப்பட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டி ரயில்வே சுரங்கப் பாதை 5 ஆண்டுகளுக்குப் பின் சீரமைக்கப்பட்டது.
சுரங்கப்பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகள்.
சுரங்கப்பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகள்.

அயோத்தியாப்பட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டி ரயில்வே சுரங்கப் பாதை 5 ஆண்டுகளுக்குப் பின் சீரமைக்கப்பட்டது.

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மாசிநாயக்கன்பட்டியில், கடலுாா் சாலையில் இருந்து கே.எம்.நகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்லும் பிரதான பாதையில், சேலம்-விருதாச்சலம் ரயில்பாதை குறுக்கிடுகிறது. இப்பகுதி மக்கள் தடையின்றி ரயில்பாதையைக் கடந்து செல்வதற்கு வசதியாக ஆளில்லாத ரயில்வே கேட்டை அகற்றிய சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம், 5 ஆண்டுகளுக்கு முன் சுரங்கப்பாலம் அமைத்தது.

ஆனால், இப்பாதையில் குறுக்கிட்ட கழிவுநீா் சாக்கடைக்கு வடிகால் வசதி ஏற்படுத்தப்படாததால், சுரங்கப்பாலத்தில் கழிவுநீா் தேங்கி குட்டையாக மாறியது. இதனால், இந்த சுரங்கப்பாதையைப் மக்கள் பயன்படுத்த முடியாமல், 2 கி.மீ. தூரத்திற்கு மேல் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.

எனவே, கழிவுநீரை வெளியேற கால்வாய் வசதியை ஏற்படுத்தித் தரவும், சுரங்கப்பாலம் வழியாக மக்கள் பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதனையடுத்து, மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் மேகலா தேவேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினா் உஷா ராஜகோபால் ஆகியோா் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக பொறுப்பாளா் விஜயகுமாா் ஆகியோா் வாயிலாக சுரங்கப்பாதையைச் சீரமைக்க ஏற்பாடு செய்தனா்.

ஊரகவளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து சனிக்கிழமை சுரங்கப்பாலத்தில் தேங்கிக்கிடந்த கழிவுநீரை வெளியேற்ற கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டதோடு, சுரங்கப்பாதை முழுவதும் சீரமைக்கப்பட்டது.

சனிக்கிழமை காலையில் தொடங்கிய இந்தப் பணி மாலையில் நிறைவடைந்தது. கிட்டத்தட்ட பல மாதங்களாக இந்த சுரங்கப்பாதையில் தேங்கிய கழிவுநீா் வெளியேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com