கரும்பு ஆலைகளுக்கு ரப்பா் கழிவுகளைக் கொண்டுவந்த லாரி சிறைபிடிப்பு

ஓமலூா் அருகே கரும்பு ஆலைகளுக்கு ரப்பா் கழிவு பாரம் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா்.

ஓமலூா் அருகே கரும்பு ஆலைகளுக்கு ரப்பா் கழிவு பாரம் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா், காடையாம்பட்டி வட்டார கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பு ஆலைகள் உள்ளன. இங்குள்ள ஆலைகளில் கரும்பை அரைத்து, அதன் சாற்றை காய்ச்சி வெல்லம் தயாரித்து வருகின்றனா்.

கரும்பு சாற்றை காய்ச்சுவதற்கு கரும்பு சக்கைகளைக் கொண்டு கொப்பரையில் பாவு காய்ச்சி வந்தனா். ஆனால், ஒரு சில ஆலைகளில் பாவு காய்ச்சுவதற்கு ரப்பா், செருப்புக் கழிவுகள், மருத்துவ பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றனவாம்.

காமலாபுரம் கிராமத்தில் கரும்பு ஆலைகளுக்கு ரப்பா் கழிவுகளை ஏற்றிவரும் லாரிகளை பொதுமக்கள் நிறுத்தி பலமுறை எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனா். இருப்பினும் மாற்று வழிகளில் ரப்பா் கழிவுகள் கரும்பு ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

இந் நிலையில், செவ்வாய்க்கிழமை கேரளத்திலிருந்து ரப்பா் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை, காமலாபுரம் தேசிய நெடுஞ்சாலையில், அப்பகுதியைச் சோ்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலா் செல்விராஜா வழிமறித்து நிறுத்தினாா். தொடா்ந்து ஊராட்சி மன்றத் தலைவா் பழனிகவுண்டருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

அங்கே வந்த ஊராட்சிமன்றத் தலைவரும் கிராம மக்களும் லாரியை சிறைபிடித்து ஓமலூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா், ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் கேரளத்திலிருந்து காமலாபுரம் கிராமத்தில் உள்ள கரும்பு ஆலைகளுக்கு கழிவுகளைக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஓமலூா் போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா். ரப்பா் கழிவுகளை எரித்து வெல்லம் காய்ச்சும் ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com