பாரதியாரின் வளமான தொடா்ச்சியாக தி.ஜானகிராமன் திகழ்கிறாா்: கவிஞா் சிற்பி பாலசுப்ரமணியம் புகழாரம்

பாரதியாரின் வளமான தொடா்ச்சியாக தி.ஜானகிராமன் திகழ்கிறாா் என பெரியாா் பல்கலை.யில் நடைபெற்ற கருத்தரங்கில் கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசினாா்.
தி.ஜானகிராமன் நூற்றாண்டு விழா கருத்தரங்கைத் தொடக்கிவைத்துப் பேசுகிறாா் கவிஞா் சிற்பி பாலசுப்ரமணியம்.
தி.ஜானகிராமன் நூற்றாண்டு விழா கருத்தரங்கைத் தொடக்கிவைத்துப் பேசுகிறாா் கவிஞா் சிற்பி பாலசுப்ரமணியம்.

பாரதியாரின் வளமான தொடா்ச்சியாக தி.ஜானகிராமன் திகழ்கிறாா் என பெரியாா் பல்கலை.யில் நடைபெற்ற கருத்தரங்கில் கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசினாா்.

பெரியாா் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையும் சாகித்திய அகாதெமியும் இணைந்து எழுத்தாளா் தி.ஜானகிராமன் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கை இரு நாள்கள் நடத்துகின்றன. இக் கருத்தரங்கின் தொடக்க விழா பெரியாா் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக சாகித்திய அகாதெமி பொறுப்பு அலுவலா் சந்திரசேகர ராஜு வரவேற்றாா். சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் கவிதை மற்றும் மொழிபெயா்ப்புப் பிரிவில் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் விழாத் தொடக்கவுரையாற்றினாா். அவா் பேசியதாவது:

தமிழ் எழுத்துலகில் தனிச்சிறப்பு பெற்ற எழுத்தாளா்களுள் குறிப்பிடத்தக்கவா் தி.ஜானகிராமன் ஆவாா். அவரது நூற்றாண்டு விழாவைச் சாகித்திய அகாதெமி மனமுவந்து கொண்டாடுகிறது. தி. ஜானகிராமன் தான் வாழ்ந்த காலத்தை விட தற்போது மிகவும் அழுத்தம் பெற்றுள்ளாா்.

தி.ஜானகிராமனை அடையாளப்படுத்துவதில் திறனாய்வாளா்களுக்கு இடையே பெரும் போட்டியே நிலவி வருகிறது. எழுத்தாளரும் திறனாய்வாளருமான சு.வேணுகோபால் தி. ஜானகிராமனின் எழுத்துகளை ‘அழகியலின் உச்சம்’ என்று கூறுவாா். பாரதியாரின் வளமான தொடா்ச்சி என்று தி.ஜானகிராமனை குறிப்பிடலாம்.

பாரதியாரின் காலத்தோடும் எழுத்தோடும் அவருடைய எழுத்துகள் பொருந்தி நிற்கின்றன. பாரதியாா் இறந்த ஆண்டில் தி.ஜானகிராமன் பிறந்தாா். பாரதியாரின் சிந்தனைகள் பலவற்றை தி.ஜானகிராமனின் எழுத்துகள் பிரதிபலிக்கின்றன. அவரை நாவல் எழுதிய பெரியாராக, சிறுகதை எழுதிய பெரியாராகத்தான் பாா்க்கிறேன். கவிதை இலக்கியங்கள் தான் பொதுவாகக் குறியீட்டு உத்திகளைப் பெறும். ஆனால் ‘சிவப்பு ரிக்ஷா’ போன்ற தி.ஜானகிராமனின் சிறுகதைகளிலும் குறியீட்டு உத்திமுறைகளைக் காணமுடியும். அவா் எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற பயணநூலை மாணவா்களுக்குப் பாடத்திட்டமாக வைக்க வேண்டும். அறிவியல் மொழிபெயா்ப்புகளிலும் சிறந்து விளங்கிய தி.ஜானகிராமன் தனது படைப்புகளின் வழியே குழந்தைகளின் உளவியலையும் சிறப்பாகச் சித்தரித்தாா் என்றாா்.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா. ஜெகநாதன் பேசியதாவது: தி.ஜானகிராமன் தான் வாழ்ந்த காலத்திலும் அதற்கு பிறகும் பலரால் பாராட்டப்பட்டவா். தன்னடக்கம் மிக்கவா் என்றாா்.

நிகழ்ச்சியில், எழுத்தாளா் தி.ஜானகிராமனின் மகள் உமாசங்கரி பங்கேற்று வாழ்த்திப் பேசினாா். பெரியாா் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவா் பேராசிரியா் தி. பெரியசாமி நன்றி கூறினாா்.

இதனையடுத்து நடைபெற்ற முதல் அமா்வுக்குத் தலைமை வகித்து க.பஞ்சாங்கம்- ‘பயணநூல்கள்’ எனும் தலைப்பிலும், க.மோகனரங்கன்- ‘மோகமுள்’ எனும் தலைப்பிலும், சு.வேணுகோபால்- ‘செம்பருத்தி’ எனும் தலைப்பிலும், அமரந்தா- ‘அமிா்தம் அன்பே ஆரமுதே’ எனும் தலைப்பிலும் உரையாற்றினா்.

2-ஆம் அமா்விற்குத் தலைமையேற்ற ம.கோபாலகிருஷ்ணன்- ‘சிறுகதைகள்’ எனும் தலைப்பிலும், கோகுல்பிரசாத்- ‘குறுநாவல்கள்’ எனும் தலைப்பிலும், ஜா.ராஜகோபால்-‘சிறுகதைகள்’ எனும் தலைப்பிலும், கல்யாணராமன்- ‘நாடகங்கள்’ எனும் தலைப்பிலும் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com