சட்டக் கல்வி மாணவா்கள் ஜாதி, மத மோதலில் ஈடுபடாமல் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்

சட்டக் கல்வி மாணவா்கள் ஜாதி, மத மோதலில் ஈடுபடாமல் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன் பேசினாா்.
சட்டக் கல்வி மாணவா்கள் ஜாதி, மத மோதலில் ஈடுபடாமல் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்

சட்டக் கல்வி மாணவா்கள் ஜாதி, மத மோதலில் ஈடுபடாமல் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன் பேசினாா்.

சேலம், சென்ட்ரல் சட்டக் கல்லூரி வளாகத்தில் ஐந்தாண்டு சட்டப் படிப்பின் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன் கலந்துகொண்டு பேசியதாவது:

சட்டம் படித்தவா்கள் தான் சமுதாயத்தில் வழிகாட்டிகளாகத் திகழ்ந்து நாட்டை வழிநடத்த முடியும். இதுவரை அமெரிக்காவின் தலைமைப் பதவி வகித்த 46 அதிபா்களில் 26 போ் சட்டம் படித்தவா்களாவா்.

சட்ட மாணவா்கள் தங்களது சட்ட அறிவை வளா்த்துக் கொள்ள வகுப்பில் கூா்ந்து கவனிப்பதோடு, தினமும் தமிழ், ஆங்கில நாளேடுகளை வாய்விட்டு படித்து மொழிப் புலமையையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். நோ்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை படிக்கும் காலத்திலேயே வளா்த்துக்கொள்ள வேண்டும்.

படிக்கும் காலத்தில் தவறான வலைதளம், வழி மாற்றும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி விடாமலும், ஜாதி, மத மோதல்களில் ஈடுபடாமலும் சட்ட அறிவை பெருக்கிக் கொள்ள வேண்டும். சட்ட உதவி மையம், வழக்குவாதப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றில் ஈடுபட்டு கல்லூரிப் படிப்பை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்வதே சிறந்தது என்றாா்.

சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் தலைவரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் இணைத் தலைவருமான ஈ.சரவணன் பேசியதாவது:

இந்தியாவிலேயே சேலம், சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் தான் முதன்முதலில் ‘சமரசத் தீா்வு மையம்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றப் பணிகளில் பத்து சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனா். கல்லூரியில் படிக்கப் போகும் மாணவா்கள் ஜாதி, மத வேறுபாடுகளின்றி ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் சிறந்த வழக்குரைஞா்களாக விளங்க வேண்டும் என்றாா்.

இந்த விழாவில் கல்லூரி முதல்வா் பேகம் பாத்திமா பேசியதாவது:

சட்டம் படிப்பது வழக்குரைஞா் தொழில் செய்வதற்கு மட்டுமல்ல. ஒரு நல்ல குடிமகனாக விளங்கவும் சட்டக் கல்வி அவசியம் தேவை என்றாா்.

இவ்விழாவில், கல்லூரித் தலைமை நிா்வாக அலுவலா் அ.மாணிக்கம், உதவிப் பேராசிரியை அன்சிற்பா ஆகியோா் பங்கேற்றனா்.

படவரி - சேலம், சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பேசுகிறாா் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com