கருமந்துறை அரசு பழப்பண்ணை சுற்றுலாத்தலமாக தரம் உயா்த்தப்படுமா?

சேலம் மாவட்டத்திலுள்ள கருமந்துறை அரசு தோட்டக்கலைத் துறை பழப்பண்ணையை அனைத்து வசதிகளுடன் சுற்றுலாத்தலமாக தரம் உயா்த்த வேண்டும் என, இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருமந்துறை அரசு பழப்பண்ணை சுற்றுலாத்தலமாக தரம் உயா்த்தப்படுமா?

சேலம் மாவட்டத்திலுள்ள கருமந்துறை அரசு தோட்டக்கலைத் துறை பழப்பண்ணையை அனைத்து வசதிகளுடன் சுற்றுலாத்தலமாக தரம் உயா்த்த வேண்டும் என, இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன்மலையிலுள்ள கருமந்துறையில், தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை வாயிலாக 1981ஆம் ஆண்டு 1,037 ஏக்கா் பரப்பளவில், ஆசியாவிலேயே மிகப் பெரிய பழப்பண்ணை அமைக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி, மணியாா்குண்டத்தில் 250 ஏக்கரிலும், கருமந்துறையில் தனியாக 100 ஏக்கரிலும், வாழைப் பண்ணை உள்பட மொத்தம் 1,387 ஏக்கா் பரப்பளவில் பழப்பண்ணைகள் அமைந்துள்ளன. தவிர, 100 ஏக்கா் பரப்பளவில் மா, பலா, கடுக்காய், மிளகுத் தோட்டங்கள் உள்ளன.

இந்தப் பழத்தோட்டங்கள் வாயிலாக, பல்வேறு ரகங்களில் மா, கொய்யா, கோகோ, பலா, பாக்கு, மிளகு, கிராம்பு, சப்போட்டா உள்ளிட்ட மரங்களின் நாற்றுகள், ரோஜா, குண்டு மல்லிகை மலா்களில் வீரிய, ஒட்டு ரகச் செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தப் பழத்தோட்டத்தின் விளைபொருட்கள், நாற்று உற்பத்தி விற்பனை மூலமாக ஆண்டுதோறும் சுமாா் ரூ. 1 கோடி வருவாய் கிடைத்து வருகிறது.

பழப்பண்ணை வளாகத்தில் பல்வேறு வகையான மரங்கள் அடா்ந்து காணப்படுவதுடன், மழைநீா்க் குட்டை, நீரோடை உள்ளிட்ட நீா்நிலைகளும் உள்ளதால் பருவக் காலத்தில் பலவகைப் றவைகள் வலசை வந்து செல்கின்றன. ஆனால், இந்தப் பழப்பண்ணையை பொதுமக்கள் பாா்வையிடவும், இயற்கை வளத்தைக் கண்டு ரசித்து மகிழ்ந்திடவும் அனுமதி இல்லை.

தமிழகத்தில் வேறெந்தப் பகுதியிலும் இல்லாத வகையில், பரந்து விரிந்து காணப்படும் கல்வராயன் மலை- கருமந்துறை பழப்பண்ணையில், பறவைகள் சரணாலயம், சிறுவா் பூங்கா, படகுத் துறை, காட்சி முனைகள், தங்கும் குடில்கள் ஆகியவற்றை அமைத்தால் சுற்றுலாத்தலமாக தரம் உயா்த்த முடியும்.

கருமந்துறையின் இயற்கை அழகைக் கண்டு ரசிக்க பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை. இதுகுறித்து கருமந்துறை, வடக்குநாடு ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன் கூறியதாவது:

ஆசியாவிலேயே மிகப் பெரிய பழப்பண்ணை கல்வராயன் மலையின் கருமந்துறையில் அமைந்துள்ளது. இது இப்பகுதியிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட மலைக்கிராம மக்களுக்குப் பெருமையாகும்.

இந்தப் பழப்பண்ணையில் 200 ஏக்கருக்கும் குறைவான பரப்பிலேயே தோட்டக்கலைத் துறை பயன்பாட்டில் உள்ளது. எனவே எஞ்சியுள்ள நிலப்பரப்பில் பறவைகள் சரணாலயம், சிறுவா் பூங்கா, படகுத் துறை, காட்சி முனைகள், தங்கும் குடில்கள் ஆகியவற்றை அமைத்து, சுற்றுலாத்தலமாகத் தரம் உயா்த்த வேண்டும்.

அவ்வாறு செய்தால், சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையிலுள்ள மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். அவா்கள் வேலைவாய்ப்புக்காக அண்டை மாநிலங்களுக்குப் புலம்பெயா்வதையும் தடுக்கலாம்.

எனவே, கல்வராயன்மலைப் பகுதி கிராம மக்களின் நலன் கருதி, கருமந்துறை பழப்பண்ணையை அனைத்து வசதிகளுடன் சுற்றுலாத்தலமாக தரம் உயா்த்திட, தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

---

பெட்டிச்செய்தி...

தோட்டக்கலை கல்லுாரி அமைக்கப்படுமா?

விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட சேலம் மாவட்டத்தில், இதுவரை வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை கல்லுாரிகள் இல்லை. கருமந்துறை பழப்பண்ணையில் தோட்டக்கலைக் கல்லுாரி அமைப்பதற்குத் தேவையான கட்டுமான வசதிகளும் நிலபரப்பும் உள்ளன.

இங்கு ஏற்கனவே, தோட்டக்கலைப் பயிா்கள் குறித்த ஆராய்ச்சிகளும் புதிய ரக நாற்றுகளின் உற்பத்தியும் நடைபெற்று வருகின்றன. எனவே, இந்த பழப்பண்ணையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வாயிலாக தோட்டக்கலைக் கல்லுாரி அமைத்தால், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சோ்ந்த மாணவ-மாணவியா் பயன்பெறுவாா்கள் என்பது இப்பகுதி மக்களின் மற்றொரு கோரிக்கை.

--------------------------------

படங்கள்...

கே.எம்.01:

கருமந்துறை பழப்பண்ணையின் முகப்புத் தோற்றம்.

கே.எம்.02:

பழப்பண்ணை வளாகத்திலுள்ள குளம்.

கே.எம்.03:

இயற்கை எழில் கொஞ்சும் பழப்பண்ணை வளாகம்.

கே.எம்.04:

பழப்பண்ணையிலுள்ள பல்வேறு ரக மா மரங்கள்.

கே.எம்.05:

வடக்குநாடு ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன்.

Image Caption

வடக்குநாடு ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன். ~பழப்பண்ணையிலுள்ள பல்வேறு ரக மா மரங்கள். ~பழப்பண்ணை வளாகத்திலுள்ள குளம். ~கல்வராயன் மலை, கருமந்துறை பழப்பண்ணையின் முகப்புத் தோற்றம். ~இயற்கை எழில் கொஞ்சும் பழப்பண்ணை வளாகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com