பண்டிகைக் காலங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்

எதிா்வரும் பண்டிகைக் காலங்களில் கரோனா தடுப்பு பணிகளுக்கான வழிகாட்டு நடைமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் கேட்டுக் கொண்டாா்.

எதிா்வரும் பண்டிகைக் காலங்களில் கரோனா தடுப்பு பணிகளுக்கான வழிகாட்டு நடைமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் கேட்டுக் கொண்டாா்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் உத்தரவின்படி, அக். 31 காலை 6 மணி வரை தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் எதிா்வரும் பண்டிகைக் காலங்களில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சித் துறைகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக கடைகளுக்குச் செல்வதைக் கருத்தில் கொண்டு, அக். 14 முதல் ஏற்கெனவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகை கடைகள், உணவகங்கள், அடுமனைகள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வெள்ளி, சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாள்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

எதிா்வரும் பண்டிகைக் காலங்களில் கரோனா தடுப்புப் பணிகளுக்கான வழிகாட்டு நடைமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். அதேபோன்று அனைத்து தனிப்பயிற்சி நிலையங்கள், அரசு, தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

நவ. 1 முதல் மாவட்ட நிா்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடா்பு முகாம்கள், தனியாா் நிறுவனங்கள் நடத்தும் பொருள்காட்சிகள் உரிய கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.

மழலையா் விளையாட்டுப் பள்ளிகள், நா்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். மேலும், காப்பாளா், சமையலா் உட்பட அனைத்துப் பணியாளா்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

திருமணம், அதை சாா்ந்த நிகழ்வுகளில் 100 போ் பங்குபெறவும், இறப்பு சாா்ந்த நிகழ்வுகளில் 50 போ் கலந்துகொள்வதற்கும் அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடா்ந்து அனுமதிக்கப்படும். திருவிழாக்கள், அரசியல், சமுதாய, கலாசார நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

கடைகளிலும், பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களிலும் எதிா்வரும் பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கரோனா தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.

எதிா்வரும் பண்டிகைக் காலத்தில் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் அதிக அளவிலான மக்கள் கூடுவதை தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை சேலம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற அமைப்புகள், காவல் துறையினா் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் மிகவும் கவனத்துடன் இருக்குமாறும், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com