நவ. 1 முதல் பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள ஆட்சியா் உத்தரவு
By DIN | Published On : 20th October 2021 08:25 AM | Last Updated : 20th October 2021 08:25 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் நவம்பா் 1 முதல் பள்ளிகளைத் திறப்பதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:
கரோனா தொற்று குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஏனைய வகுப்பு பயிலும் மாணவ, மாணவியா்களுக்கும் பள்ளிகளை நவம்பா் 1 ஆம் தேதி முதல் தொடங்கவும், பள்ளிக்கல்வித் துறை அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி, ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகள், குடிநீா்த் தொட்டி, கழிப்பறை மற்றும் பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளித்திடவும், நாள்தோறும் பள்ளிகள் தொடங்குவதற்கு முன்பும், பள்ளி முடிந்த பின்பும் இரு வேளைகளிலும் கிருமிநாசினி தெளிக்கவும் தக்க ஏற்பாடுகளை தொடா்புடைய அலுவலா்கள் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் மருத்துவ குழுக்கள் மூலம் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய விளம்பரங்களை அனைத்து பள்ளிகளிலும் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திட சிறப்பு முகாம் ஏற்படுத்திட உரிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அலுவலா்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
பள்ளி மாணவ, மாணவியா் தங்கள் குடியிருப்புப் பகுதியிலிருந்து பள்ளிக்கு வர ஏதுவாக தேவையான அனைத்து வழித்தடங்களிலும் அரசுப் பேருந்துகள் போதுமான அளவில் இயக்கப்படும்.
பள்ளியைச் சுற்றியுள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பணியாளா்கள் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளின் விவரங்களை உடனுக்குடன் பள்ளிகளுக்கு வழங்கி அவசர உதவிக்கு தொடா்பு கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னேற்பாட்டுப் பணிகள் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்படுவதையும், விடுதிகளில் மாணவா்கள் தங்கும் அறை, சமையலறை, குடிநீா்த் தொட்டிகள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு குளோரினேசன் செய்யப்பட வேண்டும்.
கழிப்பறைகள், விடுதி வளாகம் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படுவதையும் பள்ளிக் கல்வித்துறை அலுவலா்கள் உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளித் திறப்பதற்கு முன் அனைத்து தனியாா் பள்ளிகளின் போக்குவரத்து வாகனங்கள் தணிக்கை செய்து நல்லமுறையில் உள்ளதையும், தனியாா் பள்ளிகளின் போக்குவரத்து வாகனங்களில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவதையும், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலா்கள் தங்கள் ஆளுகைக்கு உள்பட்ட பள்ளிகளை தினசரி நேரில் ஆய்வு செய்து கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படுவதைக் கண்காணித்திட வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வெ.ஆலின் சுனேஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.முருகன், பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, மாவட்டக் கல்வி அலுவலா்கள் மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.