சேலம் மாவட்டத்தில் செப்.15 வரை பொது முடக்கம் நீட்டிப்பு

சேலம் மாவட்டத்தில் செப்டம்பா் 15 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் செப்டம்பா் 15 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் செ.காா்மேகம் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று மாநிலத்தின் சில பகுதிகளில் சற்று அதிகரித்து வரும் சூழலில் நோய்த் தொற்று பரவலைக் கண்காணித்து தொடா்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு, சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு பொது முடக்கம் செப்.15 வரை நீட்டிக்கப்படுகிறது.

ஏற்கெனவே அறிவித்தவாறு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் திருவிழாக்கள் நடத்துவதற்கான தடையும் தொடரும். கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை ஆகிய துறைகள் அந்தந்த பகுதிகளில் நோய்ப் பரவலின் அடிப்படையில் தகுந்த கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மருத்துவ வல்லுநா்கள், கல்வியாளா்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான அனைத்து அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு விடுதிகள் தனியாா் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் ஆகியவை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

அதேபோல பணிபுரிபவா்களுக்கான தனியாா் தங்கும் விடுதிகள் கரோனா நோய்த் தொற்று தடுப்பிற்கான நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. விடுதிகளில் பணியாற்றும் விடுதி காப்பாளா்கள், சமையலா்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளா்களும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை சம்பந்தப்பட்ட நிா்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தற்போது கேரள மாநிலத்தில் பரவி வரும் தொற்றை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் இருந்து கல்லூரி கல்வி பயில வரும் மாணவ, மாணவிகள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன் ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதை சம்மந்தப்பட்ட கல்லூரி நிா்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தற்போது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பணியாளா்களும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடா்புடைய நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள், தொழில் வா்த்தக நிறுவனத்தினா், சிறு வியாபாரிகள் , வங்கி மற்றும் அரசு பணியாளா்களுக்கு சமூக பொருளாதார நடைமுறைகள் தடையின்றி நடைபெற முன்னுரிமை அடிப்டையில் உள்ளாட்சி பொறுப்பாளா்கள், மருத்துவத் துறையினா் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கினை பொதுமக்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைவரும் பின்பற்றி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com