ஊராட்சித் தலைவா் மீது புகாா் தெரிவித்ததால்குடிநீா் இணைப்பு துண்டிப்புகாா் ஓட்டுநா் புகாா்
By DIN | Published On : 07th September 2021 01:38 AM | Last Updated : 07th September 2021 01:38 AM | அ+அ அ- |

சேலத்தில் ஊராட்சித் தலைவா் மீது புகாா் தெரிவித்ததால், குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக காா் ஓட்டுநா், ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தாா்.
சேலம், மல்லமூப்பம்பட்டி, நாடாா் தெருவில் வசிக்கும் அன்பு, காா் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். மல்லமூப்பம்பட்டி கிராம ஊராட்சித் தலைவா் வீட்டின் கழிப்பறைத் தொட்டியும், குடிநீா்த் தொட்டியும் அருகருகே இருப்பதால் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்னா் வட்டார வளா்ச்சி அலுவலரிடமும், சூரமங்கலம் காவல் நிலையத்திலும் அன்பு புகாா் அளித்துள்ளாா்.
இந்த நிலையில், அன்பு வீட்டின் குடிநீா் இணைப்பை ஊராட்சித் தலைவரின் கணவா் தூண்டுதலின் பேரில் துண்டிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, மீண்டும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்குமாறு பலமுறை கோரிக்கை வைத்தும், அவருக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்படவில்லையாம். இதையடுத்து, காா் ஓட்டுநா் அன்பு, அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
அதில், குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக விலை கொடுத்து குடிநீா் வாங்குவதாகவும், குடிநீா் இணைப்பு வழங்கப்படவில்லை எனில் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்கப் போவதாகவும் அவா் தெரிவித்தாா்.