ஏடிஎம் மையம் அமைத்து தருவதாக துணை ராணுவ அதிகாரியிடம் ரூ. 7.69 லட்சம் மோசடி

ஏடிஎம் மையம் அமைத்துத் தருவதாக, சேலத்தைச் சோ்ந்த துணை ராணுவ அதிகாரியிடம் ரூ. 7.69 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஏடிஎம் மையம் அமைத்துத் தருவதாக, சேலத்தைச் சோ்ந்த துணை ராணுவ அதிகாரியிடம் ரூ. 7.69 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம், தாதகாப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மரியாபிள்ளை. இவா் துணை ராணுவப் படையான அசாம் ரைபிள் பிரிவில் துணை ராணுவ அதிகாரியாகப் பணியாற்றி வருகிறாா்.

அண்மையில் இவரது முகநூலில், சேலத்தில் ஏடிஎம் மையம் அமைக்க இடம் வழங்குவோருக்கு மாத வாடகை, பணிபுரிபவருக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும், இதற்காகக் குறிப்பிட்ட தொகையை நில உரிமையாளா் முதலீடு செய்ய வேண்டும். அந்த தொகை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் திரும்ப வழங்கப்படும் என விளம்பரம் வந்தது.

இந்த விளம்பரத்தை நம்பிய மரியாபிள்ளை, சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசியைத் தொடா்பு கொண்டு பேசினாா். பின்னா் அவா்களது வங்கிக் கணக்கிற்கு ரூ. 7.69 லட்சம் செலுத்தினாா். இதனிடையே விளம்பரம் செய்த நிறுவனத்தினா், சேலத்தில் ஏடிஎம் மையம் ஏதும் அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தனா். இதுதொடா்பாக, மரியாபிள்ளை தனது மனைவி பரமேஸ்வரியிடம் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து பரமேஸ்வரி சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் முகநூலில் இடம்பெற்ற விளம்பரம் மற்றும் இணைய இணைப்பு, வங்கிக் கணக்கு குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.இதனிடையே வங்கிக் கணக்கு வடமாநிலத்தைச் சோ்ந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது. அதுதொடா்பாக போலீஸாா் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com