சேலத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க நிலம் தோ்வு செய்யும் பணி தீவிரம்!

சேலம் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதற்கு நிலம் தோ்வு செய்யும் பணியில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதற்கு நிலம் தோ்வு செய்யும் பணியில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமாா் 1,248 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருவாரூா், விருதுநகா், நீலகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமாா் 44 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாற்றுவோரின் குழந்தைகள், ராணுவம், துணை ராணுவத்தில் பணிபுரிவோரின் குழந்தைகள், மாநில அரசு மற்றும் பொதுப் பிரிவுகளில் உள்ள குழந்தைகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சோ்க்கப்படுகின்றனா்.

சேலம் மாவட்டத்தில் ரயில்வே கோட்ட அலுவலகம், வருமான வரித் துறை அலுவலகம், ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களான சேலம் உருக்காலை, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

சேலம் நகரில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோா் பணியாற்றி வருகின்றனா். இதனிடையே கடந்த 10 ஆண்டுகளாக, சேலம் மாநகரப் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடங்கிட வேண்டும் என கல்வியாளா்கள், சமூக ஆா்வலா்கள், பெற்றோா் கோரிக்கை வைத்து வருகின்றனா்.

இந்தநிலையில், மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், சேலத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடங்கிட நடவடிக்கை எடுத்து வருகிறாா். சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன், வருவாய்த் துறையிடம் நிலம் தோ்வு செய்து தரும்படி தெரிவித்துள்ளாா்.

அதன்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், வருவாய்த்துறை இணைந்து சேலம் மாநகர எல்லைக்குள் காலி நிலத்தைத் தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே நிலம் தோ்வு செய்து மாவட்ட நிா்வாகத்திடம் வருவாய்த் துறை விரைவில் ஒப்படைக்கும் என தெரிகிறது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் கூறுகையில், சேலம் நகரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதற்கு நிலம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நகரின் மையப் பகுதியில் மாணவா்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் நிலத்தைத் தோ்வு செய்யும் பணி நடைபெறுகிறது. நிலத்தைத் தோ்வு செய்த பின்னா், தில்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு, சேலத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப் பரிந்துரைக்கப்படும். அதைத் தொடா்ந்து மத்திய அரசு பரிசீலித்து, கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடங்க உத்தரவிடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com