புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பாசனத்திற்கு திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து புதன்கிழமை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பாசன விவசாயிகள்.
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பாசன விவசாயிகள்.

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து புதன்கிழமை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநுாற்றுமலை, பெரியகுட்டிமடுவு சந்துமலை பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதி உற்பத்தியாகிறது. இந்நதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் புழுதிக்குட்டையில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன் பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனுார்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவிற்கு வடகிழக்கு பருவமழை  பெய்யவில்லை. இதனால் மூன்று ஆண்டுகளாக ஆனைமடுவு  அணை முழு கொள்ளளவை எட்டவில்லை. 
இந்நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் டிசம்பர் வரை மாதத்தில், நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, 65.61  அடியை எட்டியுள்ளது.

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் அழகிய தோற்றம்
புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் அழகிய தோற்றம்

அணையில் 250.10 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியது. 

இந்த ஆண்டு முதல் போகத்திற்கு திறக்கப்பட்டது போக, அணையில் தற்போது 50.95அடி அளவில் 131.57 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, அணை வாய்க்கால் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் மற்றும் ஆறு, ஏரிப் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் பொதுப்பணித்துறை வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, அணையில் இருந்து, புதன்கிழமை முதல் வினாடிக்கு 60 கன அடி, வீதம் ஆறு மட்டும் ஏரி பாசனத்திற்கும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும், தொடர்ந்து 12 நாட்களுக்கு வசிஷ்டநதியில் தண்ணீர் திறக்க்கவும்,  அணை வலது மற்றும் இடது வாய்க்கால் பாசனத்திற்கு 27ந்‌ தேதியிலிருந்து தொடர்ந்து 9 நாட்களுக்கு வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் திறக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, புதன்கிழமை காலை  அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆத்தூர் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் கவிதாராணி, புழுதிக்குட்டை ஆனைமடுவு உதவி பொறியாளர் விஜயராகவன், குருச்சி சிதம்பர உடையார் பாசன  சங்கத்தலைவர் கே.பி.சண்முகம், அத்தனூர்பட்டி ஏரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் கைலாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com