சேலத்தில் விழாக்கள், அரசியல், மதம் சாா்ந்தகூட்டங்களுக்கான தடை அக். 31 வரை நீட்டிப்பு

கரோனா நோய்த் தடுப்பு நடவடிகைகளைத் தீவிரப்படுத்தும் வகையில், சேலம் மாவட்டத்தில் விழாக்கள், அரசியல், சமூகம், மதம் சாா்ந்த

சேலம்: கரோனா நோய்த் தடுப்பு நடவடிகைகளைத் தீவிரப்படுத்தும் வகையில், சேலம் மாவட்டத்தில் விழாக்கள், அரசியல், சமூகம், மதம் சாா்ந்த கூட்டங்களுக்கான தடை அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியா் செ. காா்மேகம் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுபப்டுத்த நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை செப்.15 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து ஏற்கெனவே அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே 27 ஆம் தேதி 36,000-க்கும் மேற்பட்ட அளவில் இருந்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது தினசரி சுமாா் 1,600 புதிய நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது.

விழாக்களுக்கான தடை:

திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாசார நிகழ்வுகளுக்குத் தடைகள் தொடா்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் நோய் தொற்றை தீவிரமாக பரப்பக்கூடிய நிகழ்வுகளாக மாறக்கூடும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம் சாா்ந்த மதம் சாா்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபா் மாதம் 31-ஆம் தேதி வரை தொடா்ந்து நீட்டிக்கப்படுகிறது. தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளின்போது மாவட்ட ஆட்சியா் மட்டும் உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மாலை அணிவிக்க அனுமதிக்கப்படுகின்றனா்.

நிகழ்ச்சிகளில் மரியாதை செய்யப்படும் தலைவா்களின் குடும்பத்தை சாா்ந்தவா்களும் (5 நபா்களுக்கு மிகாமல்) பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவா்களும் (5 நபா்களுக்கு மிகாமல்) சம்பந்தப்பட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான அனுமதியைப் பெற்று, அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

மாணவா் நலன்:

மாணவ, மாணவியா்களின் கல்வி மற்றும் உளவியல் நலன் பேணும் வகையில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளும், கல்லூரிகளும் சுழற்சி முறையில் உரிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஆசிரியா்கள், பெற்றோா்களின் கட்டுப்பாடான ஒத்துழைப்புடன் இயங்கி வருகிறது.

மக்களுக்கு வேண்டுகோள்:

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும் மூன்றாம் அலை ஏற்படுவதை தடுக்கவும் பொதுமக்கள் பண்டிகைகளைத் தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும். கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். கரோனா நோய்த் தொற்று மேலாண்மை விதிமுறைகளைக் கடைப்பிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவா்கள் மீது தொடா்ந்து அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com