தாரமங்கலம் காவல் நிலையம் முற்றுகை

விபத்தில் பாதிக்கப்பட்டவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து தாரமங்கலம் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

ஓமலூா்: விபத்தில் பாதிக்கப்பட்டவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து தாரமங்கலம் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

தாரமங்கலம் அருகேயுள்ள ஆரூா்பட்டி ஏரிப் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதி கடந்த வியாழக்கிழமை விபத்து ஏற்பட்டது. இதில் மொபட்டில் வந்த வேணுகோபால் (55) மற்றும் அவரது மனைவி கோவிந்தம்மாள் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனா். பைக்கில் வந்த மெய்யழகன் (25) காயம் அடைந்தனா். மூவரும் சிகிச்சைக்காக ஓமலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக வேணுகோபால் மற்றும் அவரது மனைவி கோவிந்தம்மாள் இருவரும் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி வேணுகோபால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில், வேணுகோபால் விபத்தை ஏற்படுத்தியதாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து தாரமங்கலம் காவல் நிலையத்தை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். விபத்தில் பாதிக்கப்பட்டவா் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், விசாரணை நடத்திய போலீஸாா் விபத்தினை ஏற்படுத்தியவரிடம் இருந்து புகாா் பெற்று ஒருதலைபட்சமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினா்.

தகவல் அறிந்த ஓமலூா் டி.எஸ்.பி சங்கீதா சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசப்படுத்தினாா். விசாரணை அறிக்கையின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com