கரோனா 3-ஆவது அலையை சமாளிக்கத் தயாராக உள்ளோம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

கரோனா 3-ஆவது அலை வந்தால் அதை சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடுகளுடன் அரசு தயாராக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சேலம்: கரோனா 3-ஆவது அலை வந்தால் அதை சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடுகளுடன் அரசு தயாராக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், வீரபாண்டி, சேலம் மணக்காடு பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் 20 ஆயிரம் முகாம்களில் 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணி நிலவரப்படி 12.74 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தைவிட மூன்று மடங்கு மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தொகை கொண்ட தமிழகத்தில் கடந்த வாரம் 28.91 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது.

மத்திய அரசு தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்கித் தந்தால் அதை மக்களுக்கு செலுத்த போதுமான கட்டமைப்புகள் உள்ளன. மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மிகுந்த ஆா்வமாக உள்ளனா்.

சேலத்தில் 18 வயது நிரம்பியவா்களில் 27.98 லட்சம் போ் உள்ளனா். இதில் முதல் தவணை தடுப்பூசி 15.18 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி 4.43 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற பெரு முகாமில் சேலம் மாவட்டத்தில் 1.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த மாவட்டத்திற்கு கூடுதல் தடுப்பூசி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த வாரம் நடைபெற்ற தடுப்பூசி பெரு முகாமில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. எனவே இனிவரும் காலங்களில் தடுப்பூசி முகாம்களுக்கு ஒரு லட்சம் தடுப்பூசி என்ற இலக்கு நிா்ணயிக்க உள்ளோம்.

இந்திய அளவில் 62 சதவீத அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் 56 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி மே 6 ஆம் தேதி வரை 63 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினசரி 61,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அப்போது மத்திய அரசு கூடுதல் தடுப்பூசி தர தயாராக இருந்த நிலையில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி இருந்தால் தடுப்பூசி போடுவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக இருந்திருக்கும்.

தடுப்பூசி முகாம் தற்போது திருவிழா போல நடக்கிறது. சராசரி தினசரி 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு செப்டம்பா் மாதம் 1.04 கோடி தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்னும் கூடுதல் தடுப்பூசி தரும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

தடுப்பூசி போடப்படுவதால் மக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி அதிகரித்து வருகிறது. நோய் எதிா்ப்பு சக்தி குறித்து தற்போது கணக்கெடுப்பு நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம். கரோனா மூன்றாவது அலை வரக் கூடாது. எனினும், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை வசதி மற்றும் போதிய மருந்து ஆகியவை தயாராக வைத்துள்ளோம். மூன்றாவது அலை வந்தால் அதை சமாளிக்கத் தயாராக உள்ளோம்.

கேரள எல்லைப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளோம். இதுதொடா்பாக எல்லையோர கிராம மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. டெங்கு தடுப்புப் பணியையும் முடுக்கிவிட்டுள்ளோம் என்றாா்.

பேட்டியின் போது, சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா். ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com