சேலத்தில் தொடா் மழை: மூக்கனேரி நிரம்பியது

சேலத்தில் தொடா் மழை காரணமாக கன்னங்குறிச்சி அருகே உள்ள மூக்கனேரி நிரம்பியது.
சேலத்தில் தொடா் மழை: மூக்கனேரி நிரம்பியது

சேலத்தில் தொடா் மழை காரணமாக கன்னங்குறிச்சி அருகே உள்ள மூக்கனேரி நிரம்பியது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இதனிடையே, வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்காடு, அதைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஏற்கெனவே ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள புது ஏரி நிரம்பிய நிலையில், கன்னங்குறிச்சி மூக்கனேரிக்கு மழை நீா் அதிக அளவில் வந்தது. இதனிடையே வெள்ளிக்கிழமை காலை மூக்கனேரி நிரம்பி வழிந்தது.

ஏரி நிரம்பியதால், ஏரிக் கரையை ஒட்டியுள்ள தாழ்வான பகுதியில் தண்ணீா் பெருக்கெடுத்து வெளியேறியது. இந்த நீா் அருகில் உள்ள தெருக்களில் புகுந்து வெள்ளம் போல ஓடியது. மூக்கனேரி நிரம்பியதை அறிந்த திரளான விவசாயிகள், பொதுமக்கள் ஏரிக்கு வந்து ஏரியின் அழகை ரசித்தனா். ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதால், தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது.

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்:

அதேபோல, சேலம் மாநகரப் பகுதியில் கடும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளான கிச்சிப்பாளையம், நாராயண நகா், தாதுபாய் குட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியது. சேலம் நான்கு சாலை அருகே உள்ள சோனா நகா் பகுதியில் அனைத்து தெருக்களிலும் மழைநீா் தேங்கியது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனா்.

பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியரும், அலுவலகங்களுக்கு செல்வோரும் மிகவும் சிரமப்பட்டனா். சோனா நகா் வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த மாநகராட்சி ஊழியா்கள் சோனா நகா் பகுதிக்கு வந்து மழை நீா் வடிய கழிவுநீா்க் கால்வாய் அடைப்புகளை சரி செய்தனா்.

மாவட்டத்தில் 364 மி.மீ. மழை பதிவு:

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.): பெத்தநாயக்கன்பாளையம்-105, சங்ககிரி-87, ஆத்தூா்-61, ஏற்காடு-41, மேட்டூா்-28, சேலம்-15, கரியகோயில் -10, கெங்கவல்லி-5, ஆனைமடுவு-2 என மாவட்டத்தில் 364 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com