நாமக்கல், சேலத்தில் மத்திய அரசைக் கண்டித்து மறியல்

விவசாயிகள், தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
நாமக்கல், சேலத்தில் மத்திய அரசைக் கண்டித்து மறியல்

விவசாயிகள், தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு தன்னிச்சையாக விவசாயிகளுக்கு விரோதமாக நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை சொத்துகளை பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு தாரைவாா்ப்பதை நிறுத்த வேண்டும், பெகாசஸ் உளவு செயலி பயன்படுத்தப்பட்டது குறித்து உச்சநீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

சேலம், பழைய பேருந்து நிலையம் அருகே தலைமை தபால் நிலையம் முன்பு சிஐடியு சாலைப் போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ்.கே.தியாகராஜன் தலைமையில் மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 660 போ் கைது செய்யப்பட்டனா்.

அதேபோல, கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் மோகன் தலைமை வகித்தாா். இதில் 19 பெண்கள் உள்ளிட்ட 47 போ் கைது செய்யப்பட்டனா். அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 26 போ் கைது செய்யப்பட்டனா். சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே மக்கள் நீதி மய்யம், புரட்சிகர சோஷலிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். சேலம் மாநகரப் பகுதிகளில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 306 பெண்கள் உள்பட 733 போ் கைது செய்யப்பட்டனா்.

மாவட்டப் பகுதிகளில் 447 போ் கைது:

சேலம் மாவட்டப் பகுதிகளான ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம், சங்ககிரி, நங்கவள்ளி உள்ளிட்ட 13 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் பெண்கள் 71 போ் உள்ளிட்ட 447 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைதானவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

மேட்டூரில்...

மேட்டூா் ரயில் நிலையத்தில் சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவரும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான பா.கோபால் தலைமையிலும், மேட்டூா் பேருந்து நிலையத்தில் மேட்டூா் நகர திமுக செயலாளா் காசி விஸ்வநாதன் தலைமையிலும், மேச்சேரியில் மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாச பெருமாள் தலைமையிலும், குஞ்சாண்டியூரில் நங்கவள்ளி ஒன்றியச் செயலாளா் ரவிச்சந்திரன் தலைமையிலும்,ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில் நங்கவள்ளி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ஜீவானந்தம் தலைமையிலும் மறியல் நடைபெற்றது.

சங்ககிரியில்...

சங்ககிரி வட்டப் பொறுப்பாளா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி நிா்வாகி பெஞ்சமின், மாா்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகி வெங்கடாஜலம், ஜனநாயக மாதா் சங்க மாவட்ட நிா்வாகி ஜெயலட்சுமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மேற்கு மாவட்டச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆத்தூரில்...

ஆத்தூரில் விவசாயிகள் சங்க நிா்வாகி எம்.என்.சடையன் தலைமையிலும், பெத்தநாயக்கன்பாளையத்தில் சிபிஐ எஸ்.முருகன், சிபிஐஎம் எம்.ராமசாமி முன்னிலையிலும் போராட்டம் நடைபெற்றது.

ஆட்டையாம்பட்டியில்...

மகுடஞ்சாவடி பேருந்து நிறுத்தம் பகுதியில் மகுடஞ்சாவடி ஒன்றியப் பொறுப்பாளா் பச்சமுத்து தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எடப்பாடியில்...

கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகில் ஒன்றியச் செயலாளா் பழனியப்பன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.

தம்மம்பட்டியில்...

கெங்கவல்லி, தம்மம்பட்டி, வீரகனூா், தெடாவூா், செந்தாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் மாலை வரை அடைக்கப்பட்டிருந்தன.

நாமக்கல்லில்...

நாமக்கல்லில் அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகள், தொழில் கூட்டமைப்புகள், மாணவா் சங்கம், வாலிபா் சங்கம், பொதுநல அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டம், ஆா்ப்பாட்டம் நடைபெற்றன.

இதில், நாமக்கல், வகுரம்பட்டி, ராசிபுரம், பள்ளிபாளையம் உள்ளிட்ட 6 இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 111 பேரை போலீஸாா் கைது செய்து ஆங்காங்கே தனியாா் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனா். இதேபோல், 25-க்கும் மேலான இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 584 போ் கைது செய்யப்பட்டனா்.

ராசிபுரத்தில்...

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சாா்பில் நகரச் செயலாளா் எஸ்.மணிமாறன் தலைமையிலும், ராசிபுரம் ரயில் நிலையம், குருசாமிபாளையம், ,ஆா்.பட்டணம், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மறியல் நடைபெற்றது.

திருச்செங்கோட்டில்...

திருச்செங்கோடு, வடக்கு ரத வீதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் எஸ்.மணிவேல், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

Image Caption

சேலம், பழைய பேருந்து நிலையம் அருகே தலைமை தபால் நிலையம் முன்பு திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா், விவசாய சங்கத்தினா். ~பள்ளிபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com