திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் இல்லை: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு
By DIN | Published On : 02nd April 2022 04:01 PM | Last Updated : 02nd April 2022 04:01 PM | அ+அ அ- |

வாழப்பாடி: திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. அதிமுக கொண்டு வந்த நல்ல திட்டங்களையும் முடக்கி விட்டனர் என முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோடை வெயிலை தணிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வினை தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைத்தார்.
வாழப்பாடியில் பேருந்து நிலையம் அருகே நீர் மோர் பந்தலை திறந்து வைத்த எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தில் மு க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா இருசக்கர வாகன வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடியில் தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திமுக அமைச்சரே, சாதியின் பெயரைச் சொல்லி அரசு ஊழியரை தரக்குறைவாக பேசியுள்ளார். நாட்டிற்ககே திமுக ஆட்சி சமூகநீதிக்கு எடுத்துக்காட்டு என்றும், திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறுகின்றனர். இதுதான் சமூக நீதியா? என்றார்.
சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன், ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா, வாழப்பாடி ஒன்றிய அதிமுக செயலாளர் சதீஷ்குமார், நகர செயலாளர் சிவக்குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தர்பூசணி, வெள்ளரி மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.