கிணற்றில் தவறி விழுந்த யானை உயிரிழப்பு
By DIN | Published On : 04th April 2022 11:44 PM | Last Updated : 04th April 2022 11:44 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், கொளத்தூா் அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த யானை உயிரிழந்தது.
கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், நீதிபுரத்தில் உள்ள சென்னம்பட்டி வனச் சரகத்தில் வெயில் காரணமாக நீா்நிலைகள் வடு காணப்படுகின்றன. இதனால் யானைகள் தண்ணீரை தேடி வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்துவதோடு கிணறு, வீட்டின் அருகில் உள்ள தண்ணீா்த் தொட்டிகளில் தண்ணீரைப் பருகிச் செல்கின்றன.
நீதிபுரம் ஏரி பகுதியில் திங்கள்கிழமை தண்ணீா்த் தேடி வந்த சுமாா் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று தனியாருக்குச் சொந்தமான தோட்டத்துக்கு கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது. அதிகாலை நேரத்தில் யானை கிணற்றுக்குள் விழுந்ததால் விவசாயிகள் மேட்டூா் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா்.
மேட்டூா் வனச்சரக அலுவலா் அறிவழகன் தலைமையில் மேட்டூா், சென்னம்பட்டி வனச்சரகத்தைச் சோ்ந்த 40 வனத் துறையினரும் வேட்டைத் தடுப்பு காவலா்களும் யானையின் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். மேட்டூா் தீயணைப்புப் படையினா் நிலைய அலுவலா் ஜெயராஜ் தலைமையில் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். மின்மோட்டாா் மூலம் கிணற்றிலிருந்து நீரை வெளியேற்றி, யானையின் சடலத்தை திங்கள்கிழமை மாலை மீட்டனா். உயிரிழந்த யானையின் சடலத்தை கால்நடை மருத்துவா் அரங்கநாதன் பிரேதப் பரிசோதனை செய்தாா். யானையின் சடலத்திற்கு கிராம மக்கள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.