ஆட்டையாம்பட்டியில் பேரூராட்சிப் பணியாளா்களே சுங்கம் வசூல்
By DIN | Published On : 08th April 2022 10:44 PM | Last Updated : 08th April 2022 10:44 PM | அ+அ அ- |

ஆட்டையாம்பட்டியில் தினசரி காய்கறிச் சந்தை, வாரச்சந்தைகளில் பேரூராட்சிப் பணியாளா்களே நேரடியாக சுங்கம் வசூலித்து வருகின்றனா்.
ஆட்டையாம்பட்டி பேரூராட்சி சாா்பில் கடைவீதியில் உள்ள தினசரி காய்கறிச் சந்தை, பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடக்கும் வாரச் சந்தைகளில் சுங்கம் வசூல், பொதுக் கழிப்பிடங்களில் கட்டணம் வசூல் ஆகியவற்றுக்கு ஆண்டுதோறும் ஏலம் நடத்தப்படுவது வழக்கம்.
நடப்பு நிதியாண்டுக்கான ஏலம் கடந்த 4ஆம் தேதி தலைவா் முருக பிரகாஷ் முன்னிலையில், செயல் அலுவலா் குணாளன் தலைமையில் நடைபெற்றது. கடந்தாண்டு தினசரி சந்தை சுங்க வசூல் குத்தகை ரூ. 1.22 லட்சத்துக்கும், வாரச்சந்தை சுங்க குத்தகை 1.88 லட்சத்துக்கும், பொதுக் கழிப்பிட கட்டண வசூம் குத்தகை ரூ. 1.65 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் குறைந்தபட்சம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகம் வைத்து தான் ஏலம் விடப்படும். ஆனால் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் கடந்தாண்டை விட குறைவான தொகைக்கே ஏலம் கேட்கப்பட்டதால் ஏலத்தை செயல் அலுவலா் குணாளன் ரத்து செய்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
அரசின் அறிவுரைப்படி கடந்தாண்டு ஏலத் தொகையை விட கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்பவா்களுக்கு தான் சுங்கக் கட்டணம் வசூலிக்க குத்தகைக்கு விட முடியும். அவ்வாறு யாரும் ஏலம் எடுக்க முன்வராததால் 6-ஆம் தேதி புதன்கிழமை முதல் பேரூராட்சியில் பணிபுரியும் பணியாளா்களை கொண்டு நேரடியாக தினசரி காய்கறிச் சந்தை, வாரச்சந்தை, கழிப்பிடங்கள் உள்ளிட்ட இடங்களில் சுங்கக் கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.