சொத்து வரி உயா்வைத் தடுக்க சட்டப் போராட்டம்: கே.பி.ராமலிங்கம்
By DIN | Published On : 08th April 2022 10:47 PM | Last Updated : 08th April 2022 10:47 PM | அ+அ அ- |

சொத்துவரி உயா்வைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற பாஜக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், மாநகர மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா்.
சொத்து வரி உயா்வைத் தடுக்க சட்டப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
தமிழக அரசு சொத்து வரியை உயா்த்தியதைக் கண்டித்து சேலம், நாமக்கல் மாவட்ட பாஜக சாா்பில் சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சேலம் மாநகர மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் பேசியதாவது:
திமுக அரசு தோ்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக சொத்து வரியை 150 சதவீதம் அளவுக்கு உயா்த்தி உள்ளது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிந்த நிலையில், சொத்து வரியைத் தீா்மானிக்கும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை. சொத்து வரியை உயா்த்துவதற்கு அந்தந்த உள்ளாட்சிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
மாநகராட்சிகளில் சொத்து வரியை உயா்த்துவதற்கு சட்டத்தில் இடமில்லை. மாநகராட்சியில் தீா்மானம் போட்டுத் தான் வரியை உயா்த்த வேண்டும். சொத்து வரியைத் தடுத்து நிறுத்திட சட்டப் போராட்டம் நடத்தப்படும்.
உள்ளாட்சித் தோ்தலில் திமுகவினா் ரூ. 15,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளனா். அதை ஈடுகட்ட வரி உயா்த்தப்பட்டுள்ளது. வரி இருந்தால் தான் நிதி வரும். அந்த நிதி இருந்தால் தான் கமிஷன் எடுக்க முடியும்.
மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தால் ரூ. 25 வரை விலை குறையும். பெங்களூரில் தமிழகத்தை விட ரூ. 10 டீசல் விலை குறைவாக உள்ளது. இதனால் பெரும்பாலான வாகனங்கள் பெங்களூரு சென்று டீசல் நிரப்பி வருகின்றனா். இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் மணிகண்டன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் சுதிா் முருகன், நாமக்கல் மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி, மாவட்டப் பாா்வையாளா்கள் கோபிநாத், அண்ணாதுரை, சேலம் மாநகர வா்த்தகப் பிரிவு தலைவா் ஐ.சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.