2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது
By DIN | Published On : 08th April 2022 12:00 AM | Last Updated : 08th April 2022 12:00 AM | அ+அ அ- |

சேலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.
சேலம், பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டா் பாலமுருகன் தலைமையில், அம்மாபேட்டை போலீஸாரும் இணைந்து வியாழக்கிழமை அதிகாலை சோதனையில் ஈடுபட்டனா்.
பொன்னம்மாபேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனை சோதனையிட்டதில், பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பொன்னம்மாபேட்டையைச் சோ்ந்த பிரவீன்குமாா் (33), நெத்திமேட்டைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (35) ஆகியோரை கைது செய்தனா்.
விசாரணையில், பொன்னம்மாபேட்டை பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, மாவாக அரைத்து உணவகங்கள், அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இதுதொடா்பாக, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.