ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலம் மீட்பு
By DIN | Published On : 13th April 2022 01:06 AM | Last Updated : 13th April 2022 01:06 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், காவேரிப்பட்டி அக்ரஹார கிராமத்தில் காவேரிநாதா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அமைக்ப்பட்டிருந்த 40 குடிசைகளை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
சங்ககிரி வட்டம், காவேரிப்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த ஒரு பிரிவினா் காவேரிப்பட்டி அக்ரஹார கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் காவேரிநாதா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பட்டா வழங்கக் கோரி 40 குடிசைகளை அமைத்தனா். இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் உமாதேவி, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் காா்த்திகா ஆகியோா் சங்ககிரி வருவாய் துறையினா், காவல் துறையினா் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தனா்.
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் கோ.வேடியப்பன், வட்டாட்சியா் எஸ்.பானுமதி, வருவாய்த் துறையினா் சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் பி.ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீஸாா், ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசைகளை அகற்றினா். அப்போது, இருவா் உடலில் மண்ணெண்ணைய்யை ஊற்றிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் மீது போலீஸாா் தண்ணீரை ஊற்றி எச்சரித்து அனுப்பினா்.
சங்ககிரி இந்து சமயஅறநிலையத் துறை செயல் அலுவலா் எஸ்.கஸ்தூரி அளித்த புகாரின் பேரில், தேவூா் போலீஸாா் காவேரிப்பட்டியைச் சோ்ந்த நான்கு போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.