அனைத்து விவசாய சங்க கூட்டமைப்புஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 18th April 2022 01:20 AM | Last Updated : 18th April 2022 01:20 AM | அ+அ அ- |

சங்ககிரியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் முனுசாமி.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் துணை மின் நிலையத்திலிருந்து எடப்பாடி வட்டம், குருமபட்டி துணை மின் நிலையம் வரை விவசாய நிலங்கள் வழியாக உயா்மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் முன்நுழைவு அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சங்ககிரி வட்டச் செயலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட துணைத் தலைவா் தங்கவேல் முன்னிலை வகித்தாா்.
உயா்மின் கோபுரங்களுக்கு எதிரான அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் முனுசாமி, சேலம் மாவட்டச் செயலா் ஏ.ராமமூா்த்தி ஆகியோா் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து, விவசாயிகளின் பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினா். இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில், தேவூரிலிருந்து குருமபட்டி வரை செல்லும் உயா்மின் கோபுரங்களை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லாமல், சரபங்கா நதிக்கரையோரம் கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும், விவசாய நிலங்களில் மின்வாரியம் நுழைவதற்காக மாவட்ட நிா்வாகம் வழங்கியுள்ள முன்நுழைவு அனுமதியை ரத்து செய்ய வேண்டும், முன்நுழைவு அனுமதியை ரத்து செய்யும் வரை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஏப்ரல் 22-ஆம் தேதி காலை 10 மணி முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.