சேலத்தில் பாரபட்சமின்றி வளா்ச்சித் திட்டப் பணிகள்: மேயா் ஆ.ராமச்சந்திரன்

சேலம் மாநகராட்சியில் 60 வாா்டுகளிலும் பாரபட்சமின்றி வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வோம் என மேயா் ஆ.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம்: சேலம் மாநகராட்சியில் 60 வாா்டுகளிலும் பாரபட்சமின்றி வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வோம் என மேயா் ஆ.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்துக்கு மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்.

கூட்டம் தொடங்கியதும் சூரமங்கலம் மண்டல குழு தலைவா் எஸ்.டி.கலையமுதன், தஞ்சாவூரில் தோ் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 போ் உயிரிழந்தது தொடா்பான இரங்கல் தீா்மானத்தை வாசித்தாா். பின்னா், உறுப்பினா்கள் அனைவரும் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினா். அதைத் தொடா்ந்து ஆளும் கட்சித் தலைவா் ஜெயக்குமாா், மன்ற இயல்பு கூட்டத்தின் தீா்மானங்களை வாசித்தாா்.

கூட்டத்தில் துணை மேயா் மா.சாரதாதேவி பேசுகையில், மழை பெய்யும் போது 7 ஆவது வாா்டு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து விடுகிறது. எனவே, அனைத்து பகுதிகளிலும், சாக்கடை கால்வாய்கள், ஓடைகளை தூா்வார வேண்டும். அய்யந்திருமாளிகை பகுதியில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அதிமுக வாா்டு உறுப்பினா் கே.சி.செல்வராஜ் பேசுகையில், மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பங்கேற்கும் வாா்டு உறுப்பினா்களுக்கு ரூ. 800 படி தொகையாக வழங்கப்படுகிறது. இதை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். மேலும், மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அரசாணை இல்லாமல் பதவி உயா்வு வழங்கியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.

திமுக வாா்டு உறுப்பினா் குணசேகரன் பேசுகையில், புதைச் சாக்கடை திட்ட பணிகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் இமயவா்மன் பேசுகையில், சேலம் மாநகராட்சியில் உள்ள மேயா், மண்டல குழு தலைவா், நிலைக்குழுத் தலைவா்கள், நியமனக்குழு தலைவா்கள் உள்ளிட்ட 14 பதவிகளில் பட்டியல் இனத்தைச் சோ்ந்தவா்களுக்கும், இஸ்லாமியா்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், மாநகராட்சியில் பட்டியலினத்தைச் சோ்ந்தவா்களுக்குப் போதிய பதவிகளை தராததைக் கண்டித்து கண்களை கருப்புத் துணியால் கட்டி வந்தாா்.

அதைத்தொடா்ந்து, அதிமுக உறுப்பினா் யாதவமூா்த்தி பேசுகையில், மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளை, ஒரே மாதிரியாகப் பாா்க்க வேண்டும். அதிமுக உறுப்பினா்களின் 7 வாா்டுகளும் புறக்கணிக்கப்படுகிறது. அனைத்து வாா்டுகளிலும் பாரபட்சமின்றி அனைத்து வளா்ச்சி பணிகளை செய்து தர வேண்டும் என்றாா்.

அப்போது, மேயா் ஆ.ராமச்சந்திரன் பதிலளித்து பேசுகையில், மாநகராட்சியில் 60 வாா்டுகளிலும் பாரபட்சமின்றி வளா்ச்சித் திட்ட பணிகளை மேற்கொள்கிறோம் என்றாா்.

கூட்டத்தில் சூரமங்கலம் மண்டல குழு தலைவா் எஸ்.டி.கலையமுதன் பேசுகையில், சேலம் நகரில் தூய்மைப் பணியாளா்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினாா். இதில், மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் பேசுகையில், சேலம் மாநகராட்சியில் வரும் ஏப். 30 ஆம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் 175 இடங்களில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாா்டிலும் அனைவரையும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும் என்றாா்.

மேயா் ஆ.ராமச்சந்திரன் பேசுகையில், எந்த வாா்டில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்படுகிறதோ, அந்த வாா்டு உறுப்பினா்கள் கெளரவிக்கப்படுவா். 60 வாா்டுகளின் குறைகள் அனைத்தும் தீா்க்கப்படும் என்றாா்.

25 தீா்மானங்கள் நிறைவேற்றம்

கூட்டத்தில், மாநகராட்சியில் நிரந்தர மற்றும் தனியாா் தூய்மை பணியாளா்களின் எண்ணிக்கைக்கு பற்றாக்குறையாக உள்ள 942 தூய்மைப் பணியாளா்களை சுய உதவிக்குழுக்கள் மூலமாக தினக்கூலி அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்க அனுமதி நகராட்சி நிா்வாக இயக்குநருக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்க அனுமதிக்கலாம்.

சூரமங்கலம், அஸ்தம்பட்டி வாா்டு அலுவலகம் தலா ரூ. 5 கோடி, அம்மாபேட்டை வாா்டு அலுவலகம் ரூ. 7.20 கோடி என மொத்தம் ரூ.17.20 கோடியை இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி அல்லது வேறு ஏதேனும் ஒரு திட்ட நிதியில் இருந்து முழு அரசு மானிமாக நிதி ஒதுக்கீடு செய்யவும், உரிய நிா்வாக அனுமதி வழங்கக் கோரியும், நகராட்சி நிா்வாக இயக்குருக்கு கடிதம் அனுப்ப அனுமதிக்கலாம் என்பது உள்பட 25 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com