முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 29th April 2022 04:27 PM | Last Updated : 29th April 2022 04:27 PM | அ+அ அ- |

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்தும், பணம் கேட்டு மிரட்டும் ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்டோ ஓட்டுநர் 6 பேர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டி வரும் அசோக், நாராயணன், பிரபு, வேல்முருகன், இளங்கோவன், மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தனர் அப்போது தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஆறு பேரும் தலையில் தீக்குளிக்க முயற்சி செய்தனர்
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் 6 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புதிய பேருந்து நிலையம் அருகே தாங்கள் 25 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருவதாகவும், ATC டிப்போ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுந்தரம், அர்த்தநாரி, ராஜி உள்ளிட்ட 4 பேர் எங்களிடம் இந்த பகுதியில் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்றால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஆட்டோ ஓட்ட முடியாது என்றும் ஆட்டோவில் வரும் வாடிக்கையாளரை இறக்கிவிட்டு மிரட்டி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் எங்களால் ஆட்டோ ஓட்ட முடியாமல் தவித்து வருவதாகவும், இது குறித்து பள்ளபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மனவேதனையில் வாழ்வதைவிட சாவதே மேல் என நினைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்து தீக்குளிக்க முயற்சி செய்தோம் என தெரிவித்தனர்
எனவே எங்களை கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் ரெளவுடிகள் மீது நடவடிக்கை எடுத்து ஆட்டோ ஓட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்
ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு நிலவியது.