முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சேலம் கல்லூரியில் மாணவிகள் நடிகரை சூழ்ந்ததால் பரபரப்பு
By DIN | Published On : 30th April 2022 05:38 PM | Last Updated : 30th April 2022 05:38 PM | அ+அ அ- |

சேலம்: சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் கல்லூரி விழா நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், பாடகரும், பன்முக கலைஞருமான கனா படத்தில் நாயகன் தர்ஷன் கலந்து கொண்டார். அப்போது கல்லூரியில் இருந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் தங்களுடன் வந்து நீங்கள் நடனமாட வேண்டும் என கத்தி கூச்சலிட்டு கரகோசம் எழுப்பினர்.
இதனையடுத்து நடிகர் தர்ஷன் செய்வது தெரியாமல் திகைத்து மாணவிகளுடன் நடனமாட ஒத்துக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் மேடையில் இருந்து கீழே வருவதை அறிந்த மாணவிகள் சடசடவென அவரைச் சூழ்ந்தனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகள் அனைவரையும் அப்புறப்படுத்திய நிலையில் ஒரு சில மாணவிகள் மட்டும் நடிகர் தர்ஷன் அவர்களுடன் 'ஒத்தையடி பாதையில' என்ற பாடலுக்கு நடனம் ஆடினார்.
நடிகரும் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவிகள் நடுவே நடனமாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து அன்பை வெளிப்படுத்தும் விதமாக கல்லூரி மாணவிகளை நோக்கி இதய வடிவில் கையை அசைத்து நடனம் ஆடினார்.
இந்த நிலையில் நடிகருடன் வந்திருந்த பிரபல தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் நகைச்சுவையாளர்கள் உடன் கல்லூரிப் பேராசிரியர்கள் நடனமாடினர். மேடையில் பேராசிரியர்கள் நடனம் ஆடியதை கல்லூரி மாணவிகள் விசிலடித்து கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர். இதைத் தொடர்ந்து நடிகருடன் சுயபடம் எடுக்க கல்லூரி மாணவிகள் முற்பட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்து அவசரமாக நடிகர்கள் அப்பகுதியை விட்டு கிளம்பினர்.