மேட்டூர் காவிரியில் புனித நீராட வரும் கூட்டம் குறைந்தது!

மேட்டூர் காவிரியில் புனித நீராட வரும் மக்கள் கூட்டம் இந்த வருடம் குறைந்தது.
மேட்டூர் காவிரியில் புனித நீராட வரும் கூட்டம் குறைந்தது!

மேட்டூர்: மேட்டூர் காவிரியில் புனித நீராட வரும் மக்கள் கூட்டம் இந்த வருடம் குறைந்தது.

ஆடிப்பெருக்கு நாளில் மேட்டூர் காவிரியில் நீராட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் வந்து செல்வார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா அச்சம் காரணமாக ஆடிப்பெருக்கில் காவிரியில் நீராட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் நீராட அனுமதிக்கப்பட்டது. ஆனாலும் மக்கள் கூட்டம் மிகக் குறைவாக இருந்தது. 

தங்கமாபுரி பட்டினம்-சேலம் கேம்ப் பகுதியை இணைக்கும் பாலத்தில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது. அதேபோல் கொளத்தூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் குள்ளவீரன்பட்டி  நகராட்சி பள்ளி மைதானத்திற்கு நிறுத்தப்பட்டன. பவானி சேலம் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் மேட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும், மேட்டூர் நான்கு ரோட்டில் உள்ள லாரி நிறுத்தும் இடத்திலும் நிறுத்தப்பட்டது. 

நீண்ட தூரம் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத காரணத்தால் திரும்பி சென்றனர். வார விடுமுறை நாள்களில் வரும் அளவிற்கு மட்டுமே மக்கள் கூட்டம் இருந்தது.


மேட்டூர் அணைக்கு வெள்ளப்பெருக்கு காரணமாக அதிக அளவில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாலும், வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி வரை வெள்ளநீர் வெளியேற்றப்படுவதாலும் பொதுமக்கள் காவிரியில் குளிக்க அச்சமடைந்து பெரும்பாலானவர்கள் வரவில்லை.

கிராமங்களில் இருந்து குல தெய்வங்களை தலை சுமையாக பல கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து மேலதாளம் முழங்க எடுத்து வருவோரின் எண்ணிக்கையும் குறைந்து போனது.

அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு வருவோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து இருந்தது.

மேட்டூர் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  காவிரி வெள்ளத்தில் யாரேனும் தவறி விழுந்தால் அவர்களை மீட்க 50 தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் ரப்பர் படகுகளுடன் உள்ளனர்.

ஒர்க் ஷாப் கார்னர் பகுதியில் மருத்துவ உதவி மையமும் காவல் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. குற்றங்களை தடுக்க எட்டு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com