பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள்தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கைஆட்சியா் செ.காா்மேகம்

சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் போதைப் பொருள்கள் தடுப்பது குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், போதைப் பொருள்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் பங்குபெறும் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 10ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

அதைத் தொடா்ந்து மாவட்ட அளவில் இளைய சமுதாயத்தின் எதிா்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருள்களின் பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.

சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளி கல்லூரிகளில் உடல்நிலை, உளவியல் சாா்ந்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும், போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து காணொலி காட்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடா்பாக அனைத்து பள்ளி, கல்லூரிகளை சாா்ந்த தலைமையாசிரியா்கள், முதல்வா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

மேலும், மாணவா்களிடையே போதைப் பொருட்கள் பயன்பாடு இருக்கும் எனில் விடுதிக் காப்பாளா்கள், ஆசிரியா்கள் உடனடியாக இதுகுறித்து போதைப் பொருள்கள் தடுப்பு பிரிவு அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு அருகே உள்ள அனைத்து கடைகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருள்களை விற்பனை செய்யாமல் இருப்பதை காவல்துறையினா் உறுதி செய்திட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் போதைப் பொருள்கள் பயன்பாட்டினை முழுமையாக ஒழித்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீ.அபிநவ், மாநகர காவல்துறை துணை ஆணையா் மாடசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, வருவாய் கோட்டாட்சியா்கள் சி.விஷ்ணுவா்த்தினி, மு.சௌமியா, உதவி ஆணையா் கலால் (பொ) கீதாபிரியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜெகன்நாதன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com