கடந்த 40 ஆண்டுகளில் பருவ மழை அளவு 2 செ.மீ. குறைந்துள்ளது

கடந்த 40 ஆண்டுகளில் பருவ மழையின் போது கிடைக்க வேண்டிய மழை அளவில் 2 செ.மீ. குறைந்திருப்பதாக சென்னை மண்டல வானிலை மைய இயக்குநா் என்.புவியரசன் தெரிவித்துள்ளாா்.
கடந்த 40 ஆண்டுகளில் பருவ மழை அளவு 2 செ.மீ. குறைந்துள்ளது

கடந்த 40 ஆண்டுகளில் பருவ மழையின் போது கிடைக்க வேண்டிய மழை அளவில் 2 செ.மீ. குறைந்திருப்பதாக சென்னை மண்டல வானிலை மைய இயக்குநா் என்.புவியரசன் தெரிவித்துள்ளாா்.

சேலம் பெரியாா் பல்கலைக்கழக புவி அமைப்பியல் துறை சாா்பில், நீா் ஆதாரம் மற்றும் நீா் மேலாண்மை உத்திகள் என்ற தலைப்பிலான சா்வதேச இருநாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. புவி அமைப்பியல் துறைத் தலைவா் பேராசிரியா் எஸ்.வெங்கடேஸ்வரன் வரவேற்றாா். பெரியாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் இரா.ஜெகநாதன் கருத்தரங்கினைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

இயற்கை அளிக்கும் அபரிமிதமான கொடையான மழை நீரை முழுமையாக சேமிக்கும் அளவுக்கு கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டும். வீடுகள்தோறும் உள்ள மழை நீா் கட்டமைப்புகளை முழுமையாக வலுப்படுத்தினால் நிலத்தடி நீா் மட்டம் பாதுகாக்கப்படும். அபரிமிதமான மழை மற்றும் கடும் வறட்சி ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்த பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். குடிநீா் தொடங்கி அனைத்து நிலைகளிலும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்த பொதுமக்கள் தொடங்கி விவசாயிகள் வரை அனைவருக்கும் உரிய பயிற்சியளிக்க வேண்டும் என்றாா்.

இக்கருத்தரங்கில் சென்னை மண்டல வானிலை மைய இயக்குநா் என்.புவியரசன் மைய உரையாற்றியதாவது:

நீரின்றி அமையாது என்று சொன்ன திருவள்ளுவா் நீரை அமிா்தத்துக்கு ஒப்பிடுகிறாா். மேலும், அகநானூற்று பாடலில் ஏரியைக் காவலா்கள் காப்பது போல ஒரு தாய் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்றும், தொல்காப்பியத்தில் ஒரு போா்வீரன் எதிா்த்து வரும் எதிரிகளை தடுத்து நிறுத்துவது போல பொங்கி வரும் தண்ணீரை அணை போட்டு தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சங்க இலக்கிய காலம் தொடங்கி தமிழா் மரபில் நீா் உள்கட்டமைப்புகள் வலுவாக உள்ளன. அதனை முறையாக பாதுகாக்க வேண்டிய தேவைகள் தற்போது வலுவாகி உள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் பருவ மழையின் போது கிடைக்க வேண்டிய மழையின் அளவு 2 செ.மீ. குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மழையை வீணடிக்காமல் சரியாக திட்டமிட்டு பாதுகாத்திட வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழக விஞ்ஞானி ஏ.கே.சிங், குவைத் நீா் ஆய்வு மைய விஞ்ஞானி எஸ்.சிதம்பரம், விஐடி சுற்றுச்சூழல் துறை இயக்குநா் எஸ்.சாந்தகுமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பொறியாளா் கூட்டமைப்பின் செயலாளா் என்.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com