வாகன திருத்தச் சட்ட அபராத தொகையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th December 2022 01:12 AM | Last Updated : 09th December 2022 01:12 AM | அ+அ அ- |

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சினா்.
மத்திய அரசின் வாகன திருத்தச் சட்ட அபராத தொகையை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம், நாட்டாண்மை கழகக் கட்டடம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஏ.மோகன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு 2015-ஆம் ஆண்டு வாகன திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது பல மடங்கு அபராதத்தை உயா்த்தியுள்ளது. இந்தச் சட்டத்தை தமிழக அரசு கடந்த அக்டோபா் மாதம் முதல் அமல்படுத்த தொடங்கி உள்ளது.
சேலம் மாநகரம், புகா் பகுதியில் காவல் துறையினா் இருசக்கர வாகனங்களில் வருவோரை விரட்டிப் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனா். எனவே, மத்திய அரசு விதித்துள்ள அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.