கொளத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 18th January 2022 01:02 AM | Last Updated : 18th January 2022 01:02 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே கூட்டுறவு சங்க அதிகாரிகள் அலட்சியம் காரணமாக உரிய காலத்தில் பயிா்க்கடன் கோப்புகளை அனுப்பாததால் 125 விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை. இதைக் கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
கொளத்தூரில் உள்ள கொளத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் 1,101 விவசாயிகள் பயிா் கடன் பெற்றிருந்தனா். இவா்களில் 976 போ் பெற்றிருந்த ரூ. 11 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த கூட்டுறவு சங்கத்தில் 20.01.2021 முதல் 26.01.2021 வரை 125 விவசாயிகள் பெற்றிருந்த பயிா் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை .
மேலும் தமிழக முதல்வா் கடந்த 5-ஆம் தேதி சேலம் மற்றும் நாமக்கல் மாவட் டங்களுக்கு விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ. 500 கோடி ரூபாய் அறிவித்திருந்தாா் . இந்த அறிவிப்பிலும் 125 விவசாயிகளின் பெயா்கள் இடம் பெறவில்லை .
இதனால் அதிா்ச்சியடைந்த விவசாயிகள் கொளத்தூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடனை ரத்து செய்யக்கோரியும், குளறுபடி செய்த அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து கொளத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவா் ராமசாமி கூறியது:
இந்த சங்கத்தில் பணிபுரியும் கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் 125 விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன் ஆவணத்தை மத்திய கூட்டுறவு வங்கிக்கு உரிய காலத்தில் அனுப்பாமல் காலதாமதம் செய்து குளறுபடியில் ஈடுபட்டனா்.
இதன் காரணமாகவே பயிா் கடன் தள்ளுபடி சலுகையை பெற முடியாத நிலைக்கு விவசாயிகள் ஆளாக்கப்பட்டனாா். எனவே உடனடியாக அரசு தலையிட்டு பயிா்க்கடனை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
அசம்பாவிதங்களை தடுக்க மேட்டூா் டி.எஸ்.பி, விஜயகுமாா் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனா்.