பழனி பாதயாத்திரை எடப்பாடியில் தொடங்கியது

எடப்பாடி பகுதியிலிருந்து 360 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடா்ந்து நடைபெற்று வரும் பழனி பாதயாத்திரை நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.

எடப்பாடி பகுதியிலிருந்து 360 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடா்ந்து நடைபெற்று வரும் பழனி பாதயாத்திரை நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.

பாத யாத்திரையில் திரளான பக்தா்கள் காவடி சுமந்து பழனிக்கு பாத யாத்திரையாகச் சென்றனா். கடந்த காலங்களில் விவசாயிகள் நிறைந்த எடப்பாடி சுற்றுவட்டார பகுதி மக்கள், தை மாதத்தில் அறுவடை பணிகள் நிறைவடைந்து அடுத்த கோடை மழை பொழிவுக்குப் பிறகே மீண்டும் உழவு பணிகளைத் தொடங்குவது வழக்கம்.

இந்த இடைபட்ட ஓய்வு காலத்தை பயனுள்ளதாக்கும் வகையில் அப்பகுதி விவசாயிகள் தங்களின் இஷ்ட தெய்வமான பழனி முருகப்பெருமானைத் தரிசிக்க தைப்பூச தினத்தில் நடைப்பயணம் மேற்கொள்வது வழக்கம்.

360 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. ஆரம்ப காலத்தில் ஒரே குழுவாக நடைபயணம் மேற்கொண்ட இப்பகுதி மக்கள், தற்போது வன்னியா் குல காவடிக் குழு, பருவதராஜகுல காவடிக் குழு, ஆலசம்பாளையம் பகுதி காவடிக் குழு, நாச்சியாா் காவடிக் குழு, சித்தூா் அனைத்து சமூக காவடிக் குழு, புளியம்பட்டி காவடிக் குழு என பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனா்.

எடப்பாடி அருகே காவிரிக் கரையிலிருந்து தொடங்கும் இந்த ஆன்மிகக் குழுவினா் ஈரோடு மாவட்டம்- சென்னிமலை, திருப்பூா் மாவட்டம்- வட்டமலை உள்ளிட்ட வழியில் உள்ள முருகன் கோயில்களில் சென்று சிறப்பு வழிபாடு செய்துவிட்டு பின்பு பழனியைச் சென்றடைவா்.

அங்கு பாலாற்றங்கரையில் சிறப்பு பூஜை செய்து பால் காவடி பன்னீா் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி, வேங்கை காவடி என பல்வேறு வகை காவடிகளை சுமந்து முருகனைப் போற்றி பாடல்கள் பாடியபடி பழனி மலையை வலம் வந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்வா்.

பின்பு பெரிய அளவிலான பாத்திரங்களில் பல லட்சம் எண்ணிக்கையிலான பழங்கள், தேன், கற்கண்டு, பச்சைக் கற்பூரம், சா்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு பஞ்சாமிா்த பிரசாதம் தயாா் செய்வா்.

இவ்வாறு தயாா் செய்யப்பட்ட பஞ்சாமிா்த பிரசாதத்தை தண்டாயுதபாணி சுவாமிக்கு படையல் செய்துவிட்டு அதை பக்தா்களுக்கு வழங்குவா்.

மாநிலத்தில் வேறு எந்தவொரு காவடிக் குழுவுக்கும் இல்லாத சிறப்பாக பழனி மலைக் கோயிலில் ஓா் இரவு தங்கும் உரிமை எடப்பாடி பகுதி காவடி குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.

நடப்பாண்டில் கரோனா தொற்று கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தா்கள் மட்டுமே பழனி மலைக் கோயிலில் தங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com