தமிழக அமைச்சரவையில் சேலம் மாவட்டம் இடம்பெறுமா? காத்திருக்கும் மக்கள்

சேலம் மாவட்டத்திற்கு, தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில்,  பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென, நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வாழப்பாடி: திமுகவின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே அச்சாரமாக விளங்கிய சேலம் மாவட்டத்திற்கு, தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில்,  பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென, நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு சமூக புரட்சிக்கு வித்திட்ட, தந்தை பெரியார் என்கிற ஈரோடு ஈ.வே.ராமசாமி தொடங்கிய திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த, மறைந்த முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது. அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு, திமுகவிற்கு மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தலைமை பொறுப்பேற்றார்.

திமுகவின் வளர்ச்சிக்கு சேலம் மாவட்டம் மிகுந்த பங்களிப்பை வழங்கி உள்ளது. இதில் மறைந்த தமிழக முன்னாள் வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி.எஸ். ஆறுமுகம் குறிப்பிடத்தக்கவராவார். இவரது மறைவுக்குப் பிறகு,  சேலம் மாவட்ட திமுகவில் தனித்துவம் மிக்கத்தலைவர் ஒருவரை காண முடியவில்லை என்பது ஒட்டுமொத்த தொண்டர்களிடையே நிலவி வரும் கருத்தாக உள்ளது. 

இவரது மறைவுக்குப் பிறகு, ஒன்றுபட்ட சேலம் மாவட்ட திமுகவை மூன்றாக பிரித்து, கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். சிவலிங்கமும்,  மேற்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வ கணபதியும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். சேலம் மத்திய மாவட்டத்திற்கு  சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.ராஜேந்திரன் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

மாநில தேர்தல் பிரிவு செயலாளர் பதவி வகித்து வந்த வீரபாண்டி ‌ஆறுமுகத்தின் மகன் ஆ.ராஜா கடந்தாண்டு பிறந்த தினத்தில் திடீரென மறைந்து போனார். இவரது மறைவிற்குப் பிறகு,  வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்திற்கான முக்கியத்துவம் திமுகவில் அடியோடு காணாமல் போனது. மாவட்டம் மூன்றாகப் பிரிந்து கிடப்பதால், கட்சியில் பல்வேறு குளறுபடிகளும், குழப்பங்களும் நீடித்து வருகின்றன.

இந்நிலையில், கடந்தாண்டு திமுக வெற்றி பெற்று மு. க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில், சேலம் வடக்கு தொகுதி ஒன்றை மட்டுமே திமுக வெற்றி பெற்றது. மற்ற 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. இதனால் திமுகவிற்கு மாவட்டம் முழுவதும் பேரிழப்பு ஏற்பட்டது.

உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அரசு சார்ந்த பணிகளை முறையாக தொய்வின்றி மேற்கொள்வதிலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்ததால், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டார். மாவட்ட ‌திமுக மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்ப்பால் இவருக்கு பதிலாக, திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திருச்சி கே.என்.நேரு சேலம் மாவட்ட மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.

அண்மையில் நகர, ஒன்றிய செயலாளர்கள் நியமனம் செய்தலில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண, சேலம் மாவட்டத்திற்கு மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேருவை, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திருச்சி சென்று சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

இதுமட்டுமின்றி, சேலம் மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள், முன்னோடிகள், தொண்டர்களின் செயல்பாடுகள் குறித்து கே.என். நேரு, முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், புதிய ஒன்றிய, நகர நிர்வாகிகள் தேர்வில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக, திமுக 10 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, கட்சிப் பணிகளை மேற்கொண்ட ஒன்றிய, நகர செயலாளர்கள் பலருக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, சேலம் கிழக்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர செயலாளர் பதவிகளுக்கு, லட்சக்கணக்கில் பணம் கைமாறியதாக, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையும் பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது. இதனால், மாவட்ட ‌ முழுவதும்  திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழக அமைச்சரவையில் சேலம் மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாததால், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் அரசுப் பணிகளை நிறைவேற்றும் அதிகாரிகளை ஒருங்கிணைத்து அரசின் திட்டப் பணிகளை முறையாக, முழுமையாக செயல்படுத்துவதில் பல்வேறு சிரமங்களும், முட்டுக்கட்டையும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, சேலம் மாவட்டத்திற்கு தமிழக அமைச்சரவையில் பிரதிநிதித்துவத்தை கொடுக்கும் வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்வர வேண்டுமென, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள்  இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக பதவி வகித்ததோடு, தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி கே. பழனிசாமி, சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அதிமுக வலுப்பெற்றுள்ளது. எதிர்வரும் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் அதிமுகவை வீழ்த்தி, திமுக அதிக இடங்களை கைப்பற்ற வேண்டுமெனில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திற்கு, சேலம் மாவட்டத்தை சேர்ந்தவரை பொறுப்பாளராகவும் நியமிப்பதோடு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவியும் வழங்க வேண்டியது அவசியம் ஆகும்.

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆர்.ராஜேந்திரனுக்கு மட்டுமே அமைச்சராகின்ற  வாய்ப்பு இருப்பதால், இவருக்கு  அமைச்சர் பதவி கொடுத்து, சேலம் மாவட்ட திமுகவில் நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்து, உள்கட்சி பூசல்களை தவிர்த்து, மீண்டும் கட்சியை  ‌கட்டமைக்க வேண்டுமென அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com