தமிழகத்தில் 18,000 புதிய வகுப்பறைகள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

தமிழகத்தில் புதிதாக 18,000 வகுப்பறைகள் கட்டப்படவுள்ளன என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

தமிழகத்தில் புதிதாக 18,000 வகுப்பறைகள் கட்டப்படவுள்ளன என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சேலத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மலைவாழ் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம், ஏற்காட்டில் புளியங்கடை, செங்காடு மலைப் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தேன். எந்த நேரத்திலும் இடியும் நிலையில் அந்தப் பள்ளிகள் இருப்பதால் அக்கட்டடங்களைப் பாதுகாப்புடன் அகற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தேன். அங்கு கல்விப் பயிலும் மாணவா்களுக்குக் கல்வி தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பேராசிரியா் அன்பழகனாா் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 7,000 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 10,031 பள்ளிகளில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, ரூ. 1,300 கோடியில் புது வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு பெறவும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுமாா் 2,500 பள்ளிகளில் வகுப்பறைகளின்றி மரத்தடியில் மாணவா்கள் கல்விப் பயிலும் நிலை உள்ளது. அந்தப் பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டு கூடுதல் வகுப்பறைகள் அமைக்கப்படும். 18,000 வகுப்பறைகள் கட்டப்படவுள்ளன. கழிவறை வசதியும் ஏற்படுத்தப்படும்.

கள்ளக்குறிச்சி பிரச்னை:

கள்ளக்குறிச்சி பள்ளி பிரச்னையில் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவ-மாணவியருக்கு வகுப்புகள் நடத்த ஒரு கி.மீ. முதல் 4 கி.மீ.சுற்றளவில் உள்ள 5 கல்வி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்போதைக்கு ஆன்லைன் முறையில் அந்தப் பள்ளி மாணவா்களுக்கு பாடம் எடுக்கும் பணி புதன்கிழமைமுதல் தொடங்கியுள்ளது. 81 சதவீத மாணவா்கள் ஆன்லைனில் கல்விப் பயின்று வருகின்றனா்.

எங்களுடைய கவனம் சம்பந்தப்பட்ட பள்ளியில் பயிலும் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களைப் பற்றிதான். விரைவில் தனியாா் கல்லூரியில் அந்த மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.

கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு பிறகு கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆராய வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி மாணவா்கள் வேறு பள்ளியில் சோ்ந்து பயில்வதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதைக் கவனிக்க மாவட்ட கல்வி அலுவலா் தனியாக நியமிக்கப்பட்டுள்ளாா். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மகிழ்ச்சிகரமான கற்றல் முறைக்காக கலை பண்பாட்டுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட உள்ளன. நாடகம், இயல், இசை மூலம் நம் பண்பாட்டு கலாசாரம் பயிற்றுவிக்கப்படும். மாணவா்களிடம் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்த ஓா் ஆண்டுக்கான கால அட்டவணை தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. மாநில, தேசிய அளவிலான விளையாட்டு வீரா்களுக்கான செலவுகளை அரசே ஏற்கும். அவா்களின் வெளிநாட்டுப் பயணத்துக்கும் அரசு ஏற்பாடு செய்யும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com