இடையப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா: கும்மியடித்து முளைப்பாரி ஊர்வலம்

சேலம் மாவட்டம்  பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையபட்டி மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இடையபட்டி கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி கும்மியடித்த பெண்கள்.
இடையபட்டி கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி கும்மியடித்த பெண்கள்.

வாழப்பாடி: சேலம் மாவட்டம்  பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையபட்டி மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.  இதனையொட்டி, நூற்றுக்கணக்கான பெண்கள் செவ்வாடை அணிந்து பாரம்பரிய‌ முறைப்படி கும்மியடித்து முளைப்பாரி ஊர்வலம் நடத்தினர்.‌

சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தில், இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் பழைமையான மகா மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில்,  கிராம மக்களின் முயற்சியால் மகாமண்டபம் ராஜகோபுரத்தோடு மிக நேர்த்தியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.  

இக்கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதனையொட்டி நூற்றுக்கணக்கான பெண்கள் அம்மன் சன்னதியில் செவ்வாடை அணிந்து, ஒன்றுகூடி பாரம்பரிய முறைப்படி கிராமிய பாடலுடன் கும்மியடித்து முளைப்பாரி ஊர்வலம் நடத்தினர். 

கிராமிய பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடிய குதிரை.
கிராமிய பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடிய குதிரை.

கிராமத்தை சுற்றி நடந்தேறிய இந்த ஊர்வலத்தை ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் கண்டு ரசித்தனர். பெண்களின் நடனத்திற்கு ஏற்ப அலங்கரிக்கப்பட்ட குதிரை நடனமாடி பக்தர்களை பரவசப்படுத்தியது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பெரியதனக்காரர் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

இதுகுறித்து இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வி, அனிதா, சோபனா, சுகன்யா ஆகிய பெண்கள் கூறியதாவது:

இடையப்பட்டி கிராமத்தில், நவீன நாகரீக காலத்திலும் பழமையைப் போற்றும் விதத்தில் பல்வேறு திருவிழாக்களை இன்றளவும் மரபு மாறாமல் கொண்டாடி வருகிறோம்.

மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு பாரம்பரிய முறைப்படி கிராமிய பாடலுடன் கும்மியடித்து முளைப்பாரி ஊர்வலம் எடுத்துச் சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கலையை அடுத்த சந்ததிக்கும் கொண்டுசென்று பழமையை போற்ற முடிவு செய்துள்ளோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com