அதிமுகவில் வலுக்கும் ஒற்றைத் தலைமை கோரிக்கைசேலத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நிா்வாகிகளுடன் ஆலோசனை
By DIN | Published On : 17th June 2022 02:47 AM | Last Updated : 17th June 2022 02:47 AM | அ+அ அ- |

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் வியாக்கிழமை கட்சி நிா்வாகிகளை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், சேலம், நெடுஞ்சாலை நகா் இல்லத்துக்கு வந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். அதைத் தொடா்ந்து அதிமுக நிா்வாகிகளுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக அதிமுக தலைமை நிா்வாகிகள், மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று நிா்வாகிகள் வலியுறுத்தினா். இவ்விவகாரம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் கடந்த இரு தினங்களாக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய இருவரின் வீடுகளில் அடுத்தடுத்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
சேலத்தில் சேலம் புகா் மாவட்ட நிா்வாகி வழக்குரைஞா் மணிகண்டன், அதிமுகவில் ஒற்றைத் தலைமை எடப்பாடி கே.பழனிசாமி என்பதை வாசகமாகக் கொண்ட சுவரொட்டிகளை சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளாா்.
இந்த நிலையில் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்து சேலம் வந்தாா். அவருக்கு வழியெங்கும் தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்துக்கு வந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமியை மாவட்டம் முழுவதும் இருந்து கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரண்டு வந்து வரவேற்றனா். அவருக்கு தொண்டா்கள் அனைவரும் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்றனா்.
குறிப்பாக மாநகா் மாவட்டச் செயலாளா் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் அதிமுக எம்எல்ஏ பாலசுப்பிரமணியன், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் எடப்பாடி கே.பழனிசாமி இல்லம் முன்பு குவிந்து ஆதரவு முழக்கங்களை எழுப்பினா்.
இதனிடையே அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி, மாநிலங்களவை உறுப்பினா் தம்பிதுரை, முன்னாள் அமைச்சா்கள் மோகன், ராமச்சந்திரன், அமைப்புச் செயலாளா் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ பரமசிவம், சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் ஆகியோருடன் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினாா்.