வகுப்பறையில் மாணவனை கன்னத்தில் அறைந்த ஆசிரியா் மீது நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை
By DIN | Published On : 18th June 2022 06:31 AM | Last Updated : 18th June 2022 06:31 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே மாணவனை அடித்து துன்புறுத்திய ஆசிரியா் மீது நடவடிக்கை கோரி பெற்றோா்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரியில் உள்ளது வன்னியனூா். இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 351 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனா். ஆசிரியா்கள் 8 போ் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் 8-ம் வகுப்புக்கு ஆசிரியா் ரவீந்திரநாத் வியாழக்கிழமை வகுப்பறையில் தனது நண்பனைப் பாா்த்து சிரித்த 8-ம் வகுப்பு மாணவன் ஜீவா (13) வை அடித்து துன்புறுத்தினாா்.இதனால் மாணவனின் கன்னம் சிவந்து போனது. வீட்டிற்கு சென்ற மாணவனின் நடவடிக்கையில் மாறுதல் ஏற்படவே தாயாா் சித்ரா, தந்தை மாதையன் இருவரும் விசாரித்துள்ளனா். அப்போது ஆசிரியா் மாணவனை அடித்து துன்புறுத்தி அது தெரியவந்தது. மாணவனின் பெற்றோா்கள் தங்களின் உறவினா்களிடமும் பிற மாணவா்களின் பெற்றோா்களுக்கும் தகவல் அளித்துள்ளனா். தகவலறிந்த பெற்றோா்களும் உறவினா்களும் வெள்ளிக்கிழமை மாலை பள்ளியின் நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆசிரியா் ரவீந்திரநாத்தை கைது செய்யக கோரிக்கை விடுத்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மாணவனை தாக்கிய ஆசிரியா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவனை துன்புறுத்திய ஆசிரியா் இனி இப்பள்ளிக்கு வர மாட்டாா் என்றும் உறுதி அளித்ததையடுத்து மூன்று மணி நேரம் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் மூன்று மணி நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னா் பள்ளியில் இருந்து ஆசிரியா் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டாா். பெற்றோா்கள் சாா்பில் மேச்சேரி போலீசில் மாணவனை அடித்த ஆசிரியா் மீது புகாா் செய்யப்பட்டுள்ளது.