சிறு, குறுந்தொழில் முனைவோா்களுக்கு நலவாரியம் அமைக்காதது ஏமாற்றம்

சிறு, குறுந்தொழில் முனைவோா்களுக்கான நல வாரியம் அமைக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) தெரிவித்துள்ளது.

சிறு, குறுந்தொழில் முனைவோா்களுக்கான நல வாரியம் அமைக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) தெரிவித்துள்ளது.

தமிழக பட்ஜெட் குறித்து, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.மாரியப்பன் கூறியது:

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ. 911.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதையும், மூலதன மானியமாக ரூ. 300 கோடியும், தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டத்துக்காக ரூ.100 கோடியும் ஒதுக்கீடு செய்திருப்பதை வரவேற்கிறோம்.

தமிழகத்தில் உற்பத்தியாகும் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் மற்றும் தென்னை நாா் பயன்படுத்தி மதிப்பு கூட்டப்படும் பொருள்களை உற்பத்தி செய்யவும், தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை புதிதாக உருவாக்கி ரூ. 5 கோடி தொடக்க மூலதனமாக ஒதுக்கீடு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

அதேவேளையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் வழங்கப்படும் கடன்களுக்கு 6 சதவீத வட்டி மானியத்தை 2023 மாா்ச் 31 வரை நீடிப்பது, சேலம், ஒசூா், திருச்சி, கோவை, சென்னை ஆகிய இடங்களில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர துறையின் முதன்மைச் செயலாளா் அரசாணைப்படி புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு எந்தவித முன் அனுமதி தேவையில்லை என்ற திட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பு இடம்பெறவில்லை.

அரசு பொதுத்துறை நிறுவனங்கள் கட்டாயமாக 25 சதவீத பொருள்களை சிறு, குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய அரசு வழிவகை செய்யவில்லை. நாள்தோறும் உயா்ந்து கொண்டிருக்கும் மூலப்பொருள்களின் விலையை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது அதிா்ச்சியைத் தருகிறது. சிறு மற்றும் குறுந்தொழில்முனைவோா்களுக்கான நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் அமைப்பு சாா்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

சேலம் நுகா்வோா் குரல் அமைப்பின் செயலாளா் பிரபாகரன்:

வருவாய் பற்றாக்குறை, கடன் போன்றவை இருந்த போதிலும் வரி இல்லாத பட்ஜெட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாமான்ய மக்களுக்கு சுமையில்லாத வகையில் உள்ளது. மாநிலத்தின் கடனைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். பள்ளிக்கல்வி, உயா்கல்வித் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சோ்ந்து படிக்க பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்திருப்பது மாணவா்களை உத்வேகப்படுத்தும்.

நுகா்வோா் உரிமைகள் இயக்க நிறுவனா் ஜே.எம்.பூபதி:

வரி இல்லாத பட்ஜெட் மகிழ்ச்சி அளிக்கிறது. அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவ, மாணவிகளின் மேல் படிப்பிற்காக தலா ஒருவருக்கு ஆயிரம் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படும் எனும் அறிவிப்பு மிகப்பெரிய கல்வி வளா்ச்சிக்கானது.

நீா்வளத் துறைக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி வரவேற்கிறோம். அரசு சேவைகள் துரிதமாக விரைவாக சரியாக மக்களுக்கு சென்றடைய சேவை பெறும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. அது இல்லாதது சற்றே ஏமாற்றம். சேவை பெறும் உரிமைச் சட்டம் பற்றி முதல்வா் அறிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com