தம்மம்பட்டியில் டெபாசிட் செய்த பணத்தைத் தர மறுத்ததால் வாடிக்கையாளர் தற்கொலை முயற்சி

தம்மம்பட்டி கனரா வங்கியில் டெப்பாசிட் செய்த பணத்தை தர மறுத்ததால் வாடிக்கையாளர் ஒருவர் பிளேடால் கையை
தம்மம்பட்டியில் டெபாசிட் செய்த பணத்தைத் தர மறுத்ததால் வாடிக்கையாளர் தற்கொலை முயற்சி

தம்மம்பட்டி: தம்மம்பட்டி கனரா வங்கியில் டெப்பாசிட் செய்த பணத்தை தர மறுத்ததால் வாடிக்கையாளர் ஒருவர் பிளேடால் கையை அறுத்துக்கொண்டு வங்கியில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், கொப்பம்பட்டி சிவன்கோவில் அருகே வசிப்பவர் கருப்பையா மகன் ஆனந்தன் (42). போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவர், இரண்டரை ஆண்டுக்கு முன், தனது நிலம் விற்ற 3 லட்சம் ரூபாயை, தம்மம்பட்டியில் உள்ள கனரா வங்கியில் தனது சேமிப்புக் கணக்கில் போட்டுள்ளார். பின்னர், அந்த பணத்தை டெப்பாசிட்டிற்கு மாற்ற வேண்டுமென வங்கி மேலாளர் செல்வநாதனிடம் கூறி, அதற்காக கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் கையெழுத்தும் போட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் வங்கிக்கு சென்ற ஆனந்தன், தனது கணக்கில் டெப்பாசிட் செய்த பணத்தை கேட்டுள்ளார். அதற்கு, மேலாளர் செல்வநாதன் ஏதோ காரணத்தைக் கூறி டெப்பாசிட் பணத்தை தராமல் அலைகழித்துள்ளார். இந்நிலையில், தனது 6 வயது மகளின் மருத்துவ அறுவை சிகிச்சை செலவுக்கு திடீரென பணம் தேவைப்பட்டதால், நேற்று முன்தினம் தனது மனைவி பாலாமணியுடன் வங்கிக்குச் சென்று, டெப்பாசிட் பணத்தை திரும்ப தரக்கேட்டார். 

மேலாளர் செல்வநாதன் பணத்தை தர மறுத்ததால், ஆவேசமடைந்த ஆனந்தன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.  தகவலறிந்து சென்ற தம்மம்பட்டி காவல்துறையினர், இருதரப்பிலும் விசாரணை நடத்திய பின், வங்கி மேலாளர் செல்வநாதன் 3 லட்சம் ரூபாய்க்கான தனது காசோலையை, ஆனந்தனிடம் கொடுத்தார். 

ஆனந்தன், நேற்று காலை காசோலையை எடுத்துச்சென்ற நிலையில், தனது அக்கவுண்டில் பணம் இல்லை, எனவே காசோலையை இப்போது கொடுக்க வேண்டாம் என மேலாளர் கூறியுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தன், தனது பணத்தை தராவிட்டால் இதே இடத்தில் தற்கொலை செய்துகொள்வேன் என கூறியுள்ளார். இவர் கூறியதை மேலாளர் செல்வநாதன் அலட்சியப்படுத்தியதால் மனமுடைந்த ஆனந்தன் தனது பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடை எடுத்து கையை  அறுத்துக்கொண்டார். 

இதில் அவரது கை நரம்பு துண்டித்து, அந்த அறை முழுவதும் ரத்தம் பாய்ந்தது. சம்பவத்தைப் பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டதையடுத்து, 108 ஆம்புலன்ஸ், மற்றும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். ஆனந்தன் வங்கியை விட்டு வெளியே வர மறுத்ததால், அவருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, தம்மம்பட்டி எஸ்.ஐ.ஐயப்பன் தலைமையிலான காவல்துறையினர் வங்கியில் நடத்திய விசாரணையில், ஆனந்தன் டெப்பாசிட் போட சொன்ன 3 லட்சம் ரூபாயை, வங்கி மேலாளர் செல்வநாதன் 40 சதவீதம் கமிசனுக்கு ஆசைப்பட்டு, டைட்டானியம் பிளான் எனப்படும் எல்.ஐ.சி. ஷேர் மார்க்கெட்டில் போட்டுவிட்டு, அலைகழித்தது தெரியவந்தது. 

இதையடுத்து, 3 லட்சம் ரூபாய் பணத்தை வரும் செவ்வாய்க்கிழமை ஆனந்தனுக்கு கொடுத்துவிடுவதாக, மேலாளர் செல்வநாதன் எழுத்து பூர்வமாக எழுதி ஒப்புக்கொண்டதை அடுத்து, சிகிச்சைக்கு செல்ல ஆனந்தன் ஒப்புக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். இதையடுத்து, இதேபோல் வேறு வாடிக்கையாளர்கள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வங்கியில் நடைபெற்ற இச்சம்பவம், தம்மம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com