முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
காவிரி கதவணை பகுதியில் சூறைக்காற்று
By DIN | Published On : 03rd May 2022 11:06 PM | Last Updated : 03rd May 2022 11:06 PM | அ+அ அ- |

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் உள்ள காவிரி கதவணை பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை வீசிய சூறைக்காற்றால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனா்.
சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையான பூலாம்பட்டியையும் ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணை நீா்த்தேக்கத்தில் அமைந்துள்ள நீா் மின் நிலையம் மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
கதவணை நீா்த்தேக்க பகுதியில் ஈரோடு- சேலம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த படகின் மூலம் நாள்தோறும் பெருந்திரளான பொதுமக்கள், விவசாயிகள், அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் இரு மாவட்டங்களுக்கும் சென்று வருகின்றனா்.
கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட மிகக் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை திடீரென நீா்ப்பரப்பில் கடும் சூறாவளி காற்று சுழன்று வீசத் தொடங்கியது. இதனால் கரையோர பகுதிகளில் உள்ள மரங்கள் வளைந்து காற்றின் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தள்ளாடின.
திடீரென வீசிய சூறாவளியால் அணை பகுதியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகுகள் தடுமாறின. இதனால் அவ்விசைப் படகில் பயணம் செய்த பயணிகள் மிகுந்த அச்சம் அடைந்தனா். கரையோர பகுதியில் சில இடங்களில் கூரைகள் காற்றில் பறந்தன. பூலாம்பட்டி படகுத் துறை பகுதியில் வீசிய சூறைக்காற்றால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.