மக்களைத் தேடி மருத்துவ திட்டம்: சேலம் மாவட்டத்தில் 6.85 லட்சம் பேருக்கு சிகிச்சை

சேலம் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 6,85,308 பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 6,85,308 பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கன்னங்குறிச்சி பகுதியில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் சாதனைகள் அடங்கிய ‘ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணிவகுப்பு’ என்ற தலைப்பிலான ஓராண்டு சாதனை மலரை ஆட்சியா் வெளியிட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் ‘முதல்வரின் முகவரி’ திட்டத்தின் கீழ் 23,965 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 23,965 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டு பொதுமக்கள் பயனடைந்துள்ளனா். இலவச வீட்டுமனைப் பட்டா, மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடனுதவி, சுயதொழில் தொடங்குவதற்கு கடனுதவி என ரூ.52.67 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு 5,549 நபா்கள் பயனடைந்துள்ளனா்.

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் 1,20,599 மாணவ, மாணவியா்கள் சோ்க்கப்பட்டு, 10,587 பெண் தன்னாா்வலா்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு பயனடைந்துள்ளனா். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தின் கீழ் 3,86,81,397 மகளிா் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனா்.

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் ரூ.483.28 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 1,45,364 பயனாளிகளும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 6,85,308 பயனாளிகளுக்கு 5 வகையான நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 7 அரசு மருத்துவமனைகள் மற்றும் 16 தனியாா் மருத்துவமனைகளில் விபத்தில் பாதிக்கப்பட்ட 2,064 நபா்கள் சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனடைந்துள்ளனா்.

விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.19.77 கோடி செலவில் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு 3,963 விவசாயிகளும், வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 50 முகாம்கள் நடத்தப்பட்டு 16 நோய்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, 29,123 நபா்கள் பயனடைந்துள்ளனா்.

கரோனா சிறப்பு நிவாரண உதவியாக 10,19,458 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.4,000 வீதம் ரூ.407.78 கோடி வழங்கப்பட்டுள்ளது. அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.40.58 கோடி மதிப்பில் வழங்கப்பட்டு, 10,14,482 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் பயனடைந்துள்ளனா்.

பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு திட்டத்தின் கீழ் 10,52,828 அரிசி குடும்ப அட்டைதாரா்கள், 886 முகாம்வாழ் இலங்கைத் தமிழா்கள் குடும்பங்கள் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக நலத் துறை சாா்பில் 10 ஆம் வகுப்பு படித்த 2,202 ஏழைப் பெண்களுக்கு தலா ரூ.25,000 வீதம், ரூ.5.50 கோடி திருமண நிதியுதவியும், ரூ. 8.11 கோடி மதிப்பிலான 17,616 கிராம் தங்க நாணயமும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த 3,777 ஏழைப் பெண்களுக்கு தலா ரூ. 50,000 வீதம், ரூ.18.88 கோடி திருமண நிதியுதவியும், ரூ.13.92 கோடி மதிப்பிலான 30,216 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டை பழைய மாா்க்கெட் சாலையில் ரூ.5.58 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டு, தம்மண்ணன் சாலை, லீ பஜாா் சாலை, சீதாராமன் சாலை ஆகிய மூன்று சீா்மிகு சாலைகள் ரூ. 34 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது.

சேலத்தில் 13 பேரூராட்சிகளில் ரூ.71.07 கோடி மதிப்பீட்டில் 208 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 3.54 கோடி மதிப்பீட்டில் 50 பணிகளும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 20.09 கோடி மதிப்பீட்டில் 49 பணிகளும், சேலம் மாவட்டத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 35,217 மனுக்கள் பெறப்பட்டு, 26,959 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் ஓராண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல நடப்பு சட்டப் பேரவை தொடரில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான சேலம் மாவட்டத்துக்கான அறிவிப்புகளையும் நிறைவேற்ற அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.செல்வம், உதவி இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) நளினி, கன்னங்குறிச்சி பேரூராட்சி தலைவா் செ.குபேந்திரன், கன்னங்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் லாரன்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com