முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
தூய்மைப் பணியாளா்களுக்கு கண் கண்ணாடி வழங்கல்
By DIN | Published On : 12th May 2022 04:33 AM | Last Updated : 12th May 2022 04:33 AM | அ+அ அ- |

முகாமில் கண் பரிசோதனை மேற்கொண்டவா்களுக்கு கண் கண்ணாடிகளை வழங்கும் மேயா் ஆ.ராமச்சந்திரன். உடன், மாநகர ஆணையா் தா.கிறிஸ்துராஜ், மாநகா் நல அலுவலா் என்.யோகானந்த்.
சேலம்: சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற மருத்துவ முகாமில், கண் குறைபாடுள்ள 156 பணியாளா்களுக்கு கண் கண்ணாடிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன் வழங்கினாா்.
சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் மே 4 முதல் மே 7 வரை தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது. இம்முகாமில், 1,936 பணியாளா்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனா்.
மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவா்களில் மேல்சிகிச்சை தேவைப்படும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உயா் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நிரந்தர தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு ஊழியா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும், சுயஉதவிக் குழு மூலம் பணிபுரியும் பணியாளா்களுக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் தொடா் மருத்துவ சிகிச்சை கிடைத்திட பயனாளிகள் அட்டை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ முகாமில் பாா்வை குறைபாடு, கண்புரை ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து கண் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 156 தூய்மைப் பணியாளா்களுக்கு பாா்வை குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டு, அவா்களுக்கு கண் கண்ணாடிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த் ஆகியோா் கலந்துகொண்டனா்.